விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்துவதாக சிபிசிஐடி போலீஸாரால் கைது செய்யப்பட்ட பேராசிரியை நிர்மலாதேவி வழக்கு விசாரணைக்காக இன்று (திங்கள்கிழமை) காலை ஸ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
மொட்டையடித்த படி அவர் வந்திருந்தார்.
அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் கடந்த 2017 ஆம் ஆண்டு மாணவிகளை தவறாக வழிநடத்துவதாக பேராசிரியை நிர்மலாதேவி கைது செய்யப்பட்டார். அவருக்கு உறுதுணையாக செயல்பட்டதாக மதுரை காமராசர் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன் மற்றும் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் இருந்து இந்த வழக்கு விசாரணை பின்னர் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. திருவில்லிபுத்தூரில் உள்ள மகளிர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த முறை நீதிமன்றத்தில் ஆஜராக வந்த பேராசிரியை நிர்மலாதேவி தனக்கு அருள் வந்தது போல் செயல் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து அருப்புக்கோட்டையில் உள்ள மசூதி ஒன்றிற்கு சென்ற பேராசிரியை நிர்மலாதேவி அங்கும் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தனக்கு மனநல சிகிச்சை தேவைப்படுவதாக வழக்கறிஞரிடம் பேராசிரியை நிர்மலாதேவி வேண்டுகோள் விடுத்தார். அதனையடுத்து திருநெல்வேலியில் உள்ள ஒரு மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பேராசிரியை நிர்மலாதேவி சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் பேராசிரியை நிர்மலாதேவி மொட்டையடித்த கெட்டப்பில் ஆஜரானார்.
வழக்கு விசாரணைக்கு ஆய்வு மாணவர் கருப்பசாமியும் ஆஜரானார். உதவிப்பேராசிரியர் முருகன் வழக்கு விசாரணைக்கு ஆஜராகவில்லை. அதை எடுத்து இவ்வழக்கு விசாரணையை இம்மாதம் 19-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி பாரி உத்தரவிட்டார்.
நீதிமன்றத்திற்கு வந்த பேராசிரியை நிர்மலாதேவியிடம் வழக்கறிஞர்கள் சிலர் மொட்டை குறித்து கேட்டபோது இருக்கன்குடி மாரியம்மன் கோயிலுக்குச் சென்று தான் முடி காணிக்கை செலுத்தியதாகத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment