வவுனியாவின் ஓமந்தை பகுதி தனியான பிரதேச செயலகமாக மாற்றப்பட வேண்டும் என வன்னி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக தீர்மானம் எடுத்துள்ளனர்.
வர்த்தக கைத்தொழில், நீண்டகால அபிவிருத்தி மற்றும் திறன் விருத்தி அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் குழுக்களின் பிரதித் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோரின் இணைத் தலைமையில் வவுனியா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே இத் தீர்மானம் எட்டப்பட்டது.
வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நடைபெற்ற போது நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கருத்து தெரிவித்தபோது,
புதிய பிரதேச செயலகங்களை உருவாக்கும் திட்டத்தின் ஓமந்தை தனியான பிரதேச செயலகமாக மாற்றப்பட வேண்டும்.
செட்டிகுளம், நெடுங்கேணி என்பன 20 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டது. ஆனால் வவுனியா மாத்திரம் 42 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்ட 219 க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
ஆகவே அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டதன்படி ஓமந்தை தனியான பிரதேச செயலகமாக கொண்டு வருவதற்கு இதில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டும்-என்றார்.
விடயம் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா, தெரிவிக்கையில்,
ஓமந்தை பிரதேச செயலகமாக பிரிக்கும்போது உள்ளடங்கும் கிராமங்கள் தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். நெடுங்கேணி பிரதேச செயலக பிரிவில் உள்ள எந்தவொரு கிராமத்தையும் உள்வாங்காது வவுனியா பிரதேச செயலக பிரிவில் உள்ள கிராமங்களை உள்ளடக்கி மட்டும் ஓமந்தை பிரதேச செயலகம் பிரிக்கப்பட வேண்டும் - என்றார்.
இதன்படி வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட 14 கிராம அலுவலர் பிரிவுகளைப் பிரித்து ஓமந்தை பிரதேச செயலகமாக மாற்றுவது என அமைச்சர் றிசாட் பதியுதீன் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் இணைந்து தீர்மானமாக நிறைவேற்றினர்.
இது தொடர்பில் மாவட்டச் செயலர் ஊடாக பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர குணவர்த்தனவுக்கும் கடிதம் மூலம் தெரியப்படுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment