தடுப்பணை கட்டுவதை இயக்கமாக மாற்ற வேண்டும்; ராமதாஸ்

தடுப்பணை கட்டுவதை இயக்கமாக மாற்ற வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுதொடர்பாக ராமதாஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், " நீர்வளத்தை மேம்படுத்துவதில் தடுப்பணைகளுக்கு எத்தகைய பங்கு இருக்கிறது என்பதை அண்ணா பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வு ஆதாரங்களுடனும் நிரூபித்திருக்கிறது. பருவநிலை மாற்றத்தின் கொடிய விளைவுகள் தமிழகத்தை கடுமையாக வாட்டத் தொடங்கிவிட்ட நிலையில், நீர் வளத்தையும், விவசாயத்தையும் வலுப்படுத்த தடுப்பணைகள் தான் சிறந்தவழி என்பதை இந்த ஆய்வு உணர்த்தியுள்ளது.

ஆந்திரத்தில் உருவாகி ஊத்துக்கோட்டை வழியாக தமிழகத்தில் நுழையும் ஆரணி ஆற்றின் குறுக்கே மொத்தம் 9 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. அவற்றில் மிகப்பெரிய தடுப்பணை திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த பாலேஸ்வரம் என்ற இடத்தில் கட்டப்பட்டுள்ளது.

290 மீட்டர் அகலமும், 3.5 மீட்டர் உயரமும் கொண்ட அந்த தடுப்பணையால் அப்பகுதியில் நிலத்தடி நீர் மட்டம் எந்த அளவுக்கு மேம்பட்டிருக்கிறது என்பதை அறிய அண்ணா பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறை சார்பில் 2010 ஆம் ஆண்டு முதல் 2013-ஆம் ஆண்டு வரை 3 ஆண்டுகள் ஆய்வு நடத்தப்பட்டது. தடுப்பணை மூலம் வியக்கத்தக்க பயன்கள் கிடைத்திருப்பது ஆய்வில் தெரியவந்ததாக அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

பாலேஸ்வரம் தடுப்பணை மூலம் அதைச்சுற்றி ஒன்றரை கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமான அளவு உயர்ந்திருக்கிறது. தடுப்பணையின் நீர்த்தேக்கப் பகுதியில் மட்டும் 2.82 கோடி கன அடி தண்ணீரை தேக்கி வைக்க முடியும். இந்த தண்ணீரில் 60% நீர் நிலத்தடியில் பயணித்து ஆரணியாற்றை சுற்றியுள்ள நீர்நிலைகளை நிரப்புவதுடன், நிலத்தடி நீர்மட்டத்தையும் உயர்த்துவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்திலுள்ள அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகள் கட்டப்படும்பட்சத்தில் பருவமழை பொய்த்தாலும் கூட தடையின்றி உழவு செய்ய முடியும்; உழவுத்தொழில் ஒரு போதும் பாதிக்கப்படாது என்பதுதான் இதன் மூலம் தெரியவரும் செய்தியாகும். பாமகவும் இதைத் தான் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. காவிரி, கொள்ளிடம்  உள்ளிட்ட அனைத்து ஆறுகளிலும் நில அமைப்பைப் பொறுத்து 10 கிலோ மீட்டருக்கு ஒரு தடுப்பணை கட்டப்பட வேண்டும் என்று பாமக அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி வருகிறது.

பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருவதை அண்ணா பல்கலைக்கழகம் இப்போது ஆதாரங்களுடன் உறுதி செய்திருக்கிறது. இந்த உண்மையை உழவர்கள் முதல் அரசு வரை அனைத்துத் தரப்பினரும் உணர்ந்து கொண்டு, இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே பாமக விருப்பம் ஆகும். தென் மாநிலங்களுடன் ஒப்பிடும் போது தமிழகத்தில் சொல்லிக் கொள்ளும்படியாக தடுப்பணைகள் கட்டப்படவில்லை.


ஆனாலும் கூட, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம்,  கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் ஓடும் சிறிய ஆறுகளின் குறுக்கே 10 ஆயிரம் தடுப்பணைகள்  கட்டப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் அண்மையில் அறிவித்திருப்பது  நீர் மேலாண்மையில் ஏற்பட்டுள்ள வரவேற்கத்தக்க முன்னேற்றமாகும். முதல்வர் அறிவித்த 10,000 தடுப்பணைகளுக்கான நிதி ஒதுக்கீடு, ஒப்பந்தப்புள்ளி வழங்குதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை உடனடியாக முடித்து கட்டுமான பணிகளைத் தொடங்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்.

ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகளைக் கட்டுவதுடன் மட்டும் கடமை முடிந்துவிடுவதில்லை. கட்டப்பட்ட தடுப்பணைகளைப் பராமரிப்பதும், தூர்வாருவதும் மிக முக்கிய பணிகளாகும். சிறிய தடுப்பணைகளை ஆண்டுக்கு ஒருமுறையும், பெரிய தடுப்பணைகளை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறையும் தூர்வாரவில்லை என்றால் அவற்றின் பயன்பாடு பாதியாக குறைந்து விடும் என்பது ஆய்வில் தெரியவந்துள்ள இன்னொரு முக்கிய உண்மையாகும்.

தமிழகத்தின் அனைத்து ஆறுகளிலும் தடுப்பணைகளைக் கட்டுவதும், அவற்றைப்  பராமரிப்பதும் அவ்வளவு எளிதான பணியல்ல. மாநில அரசால் மட்டும் இவை அனைத்தையும் செய்து விட முடியாது. உள்ளாட்சி அமைப்புகள், உழவர் அமைப்புகள் ஆகியவற்றின் ஒத்துழைப்பும் அவசியமாகும். எனவே, தடுப்பணைகளை கட்டுவதையும், பராமரிப்பதையும் மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

ஒவ்வொரு ஆண்டு நிதிநிலை அறிக்கையிலும் தடுப்பணைகள் கட்டுவதற்காக தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். தமிழக அரசால் கட்டிக் கொடுக்கப்படும் தடுப்பணைகளில் இருந்து அசுத்தமான நீரை வெளியேற்றுதல், தடுப்பணைகளை தூர்வாருதல் ஆகிய பணிகளை உள்ளாட்சி அமைப்புகளும், உழவர் அமைப்புகளும் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

இப்பணிகளை ஒருங்கிணைப்பதற்காக இதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய குழு ஒன்றையும் அரசு அமைக்க வேண்டும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment