ஈஸ்டர் தாக்குல்களின் சூத்திரதாரி சஹ்ரான் தமிழில் பிரசாரம் செய்ததால், இந்த விவகாரத்தில் இந்தியாவுக்கும் ஆபத்துள்ளது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து ஆராயும் தெரிவுக்குழுவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலையாகி சாட்சியம் வழங்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்ற நிலையில் அதில் இருந்து அரசாங்கம் தப்பிக்க முடியாது என்றும் அரசாங்கம் இதில் பொறுப்பேற்க வேண்டும் என்பது தனது நிலைப்பாடு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சூழ்ச்சியில் தொடர்புபட்ட பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒரு குழு அழிக்கப்பட்ட காரணத்தினால் பிரச்சினை முடிந்ததாக கூற முடியாது என்றும் வேறு யார் உள்ளனர் என்பதை கண்டறிய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆயுதம் என்பது துப்பாக்கி மட்டும் அல்ல என்றும் வேறு எதனையும் பயன்படுத்த முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புதிய பயங்கரவாத யுகத்தில் அவற்றை எதிர்கொள்ள சட்டங்களை உருவாக்க வேண்டும் என்பதோடு, தனி நபரால்கூட பயங்கரவாத செயற்பாட்டில் ஈடுபட முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மேலும் சஹ்ரான் தமிழில் பிரசாரம் செய்வதால் இலங்கைக்கு மட்டும் அல்ல தென்னிந்தியாவிற்கும் பாரிய அச்சுறுத்தல் என்றும் இதன் காரணமாகவே அவர்கள் அக்கறை செலுத்துகின்றனர் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment