'கோமாளி' - ரஜினி பற்றிய காட்சி நீக்கம்


அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'கோமாளி'. அப்படத்தின் டிரைலரில் ரஜினிகாந்த் அரசியல் நுழைவு பற்றி கிண்டல் செய்து ஒரு காட்சி அமைத்திருந்தனர். அந்தக் காட்சிக்கு கமல்ஹாசன் வருத்தமும், ரஜினி ரசிகர்கள் எதிர்ப்பும் தெரிவித்தனர்.

அதன் காரணமாக அந்தக் காட்சியை படத்திலிருந்து நீக்குவதாக படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், இயக்குனர் பிரதீப் ஆகியோர் அறிவித்தனர். அந்தக் காட்சியை நீக்க அவர்கள் முடிவு செய்ததற்கு திரையுலகில் உள்ள இளம் இயக்குனர்கள் சிலரும், சினிமா ரசிகர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

ஒரு விஷயத்தை மிகவும் சுவாரசியமாக படத்தில் வைத்துள்ளார் இயக்குனர். அது யாருடைய மனதையும் புண்படுத்துவது போலவும் இல்லை. அதை நகைச்சுவையாகத்தான் பார்க்க வேண்டும். கமல்ஹாசன், ரஜினிகாந்த் ஆகியோர் இதற்கு முன் நடித்த பல படங்களில் இதைவிட நேரடியாக அரசியல்வாதிகளையும், அரசு அதிகாரிகளையும் நேரடியாகத் தாக்குவது போன்ற காட்சிகளை வைத்திருக்கிறார்கள்.

கமல்ஹாசன் 'விஸ்வரூபம்' படப் பிரச்னையில் என்னவெல்லாம் பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். ரஜினிகாந்த் சினிமாவில் இல்லாமல் மக்கள் மனங்கள் புண்படுமாறு தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் உள்ளிட்ட சில சம்பவங்களில் பேசியிருக்கிறார். அப்படியிருக்கும் போது இந்த 'கோமாளி' காட்சியை பெரிதாக்கி அதில் அரசியல் செய்ய நினைக்கின்றனர் என தெரிவித்துள்ளனர்.

நேற்று 'கோமாளி' டிரைலரில் ரஜினி சம்பந்தப்பட்ட காட்சியை நீக்க முடிவு செய்து அது குறித்து அவர்கள் வெளியிட்ட வீடியோவில் இயக்குனர் பிரதீப்பிடம் கடும் பதட்டம் தெரிந்தது. 26 வயதில் இயக்குனராக அறிமுகமாகும் ஒரு இளைஞருக்கு இப்படி ஒரு அழுத்தத்தை ரஜினிகாந்த் ரசிகர்கள் மறைமுகமாவும், கமல்ஹாசன் நேரடியாகவும் கொடுத்திருக்கக் கூடாது என்றே பலரும் நினைக்கிறார்கள்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment