அமெரிக்காவின் டென்னிஸீ மாகாண நாஷ்வில் சிறையில், பதினைந்து ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்து வரும் சின்டோயா பிரௌன், ஆகஸ்ட் ஏழாம் தேதி வெளியேவருகிறார். இவரது விடுதலைக்காக அமெரிக்காவே குரல் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சின்டோயா பிரௌன், தன்னுடைய 16-வது வயதில், 43 வயதான ஜானி ஆலன் என்பவரை அவரது பின்தலையில் துப்பாக்கியால் சுட்டார். அதில் ஜான் ஆலன் மரணமடைய, அந்நாட்டு நீதிமன்றம் பிரௌனிற்கு ஆயுள் தண்டனை கொடுத்தது.
மிகவும் கடினமான ஒரு குழந்தைப் பருவத்தைக் கொண்ட சின்டோயா பிரௌன், அவருடைய நண்பர் ஒருவரின் நிர்பந்தத்தால் போதை மருந்து கொடுக்கப்பட்டு, பலரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார். பின்னர் அவரை ஜான் ஆலன் என்பவர் அவரது வீட்டிற்கு அழைத்துச் சென்று தன்னுடன் பாலியல் உறவுகொள்ளச் சொல்லி வற்புறுத்த, அவர் வீட்டிலிருந்த துப்பாக்கியால் ஜானைச் சுட்டிருக்கிறார். இதை பிரௌன் தானாகவே நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதன் பேரில், அவருக்கு ஆயுள் தணடனை வழங்கப்பட்டது.
அமெரிக்காவின் டென்னிஸீ மாகாண சட்டப்படி, ஆயுள்தண்டனை என்பது குறைந்தது 51 ஆண்டுகள். அதன்பிறகுதான் ஒருவர் பரோலில் வெளிவருவதற்குக்கூட விண்ணப்பிக்க முடியும். இளைஞர்கள் தவறிழைத்தால் தண்டிக்கும் இந்தச் சட்டம், மிகவும் கடுமையானதாக இருப்பதாக இதற்குப் பல்வேறு எதிர்ப்புக் குரல்கள் கிளம்பின. அதேசமயம், சின்டோயா பிரௌன் விடுதலை செய்யப்படவேண்டும் என்றும் பலரால் கோரிக்கைவைக்கப்பட்டது.
பிரபல பாடகி ரிஹான்னா, "இளம் வயதிலேயே பல்வேறு துன்பங்களால் அலைக்கழிக்கப்பட்ட ஒரு சிறுமி, தன்னைப் பாதுகாத்துக்கொள்ள ஒரு கொலையைச் செய்தால், அரசாங்கம் நியாயமாக அந்தச் சிறுமியின் மறுவாழ்விற்காக ஆவன செய்திருக்க வேண்டும். மாறாக, தவறிழைத்தவனை மறந்துவிட்டு பாதிக்கப்பட்ட சிறுமிக்குத் தண்டனை கொடுப்பதெல்லாம் நீதிக்குப் புறம்பானது. அச்சிறுமியின் தண்டனைக்குக் காரணமானவர்களுக்குக் குழந்தைகள் பிறக்காதிருக்க கடவுளை வேண்டுகிறேன்" என்று பதிவிட்டிருந்தார்.
இதைத் தொடர்ந்து நாடு முழுக்க சினிமா பிரபலங்களும், அறிஞர்களும், வழக்கறிஞர்களும், சிறுவர் உரிமைக்குக் குரல் கொடுப்பவர்களும், தொண்டு நிறுவனங்களும் இந்தச் சிறுமிக்கு ஆதரவாக ஒன்றுதிரண்டனர். அதன் விளைவாகத்தான், அவருடைய தணடனைக்காலத்தை குறைத்து இப்போதே அவரை விடுதலை செய்ய முடிவெடுத்திருக்கிறது அந்நாட்டு அரசு.
பிரௌனிடம் விடுதலைச் செய்தியைப் பகிர்ந்துகொண்டதைப் பற்றி விவரித்திருக்கும் அவரது வழக்கறிஞர், "ஆகஸ்ட் மாதம் உனக்கு விடுதலை" என்று சொன்னதும் அவள் முகத்தில் இதுவரை கண்டிராத ஒரு மகிழ்ச்சியைக் கண்டேன். "விடுதலைக்கு ஏழு மாதங்கள் இருக்கிறது என்று வருத்தமா?" என நான் கேட்டதற்கு, பிரௌன் சிரித்துக்கொண்டே, "கிண்டல் செய்கிறீர்களா? நான், என்னுடைய 67-வது வயதுவரை உள்ளிருக்க நேரும் என நினைத்தேன். ஆனால், நான் 31 வயதிலேயே விடுதலை பெறுகிறேன் என்பதை உணரும்போது மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று சொன்னதாகக் கூறியிருக்கிறார்.
16 வயதில் சிறையில் அடைக்கப்பட்ட பிரௌன், 31 வயதில் விடுதலையானாலும், இன்னும் அவருக்கு முழு விடுதலை வழங்கப்படவில்லை. அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் பரோல் அலுவலரைச் சந்திக்க வேண்டும். கண்டிப்பாக ஒரு வேலையில் இருக்க வேண்டும். கவுன்சலிங் செல்ல வேண்டும் உள்ளிட்ட சில நிபந்தனைகள் அவருக்கு விதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், உலகம் முழுவதும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையும், பாதிக்கப்பட்டவரையே குற்றவாளியாக மாற்றும் மனநிலையும், மனச்சாட்சியில்லாத சில சட்டங்களும் பரவியிருக்க, பல ஆயிரம் நபர்கள் நியாயமற்றுச் சிறையில் அவதிப்படும் நேரத்தில், சின்டோயா பிரௌனின் இந்த விடுதலை ஒருமித்த குரல்களின் வெற்றியாகவே கருதப்பட வேண்டும்.
0 comments:
Post a Comment