ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப் பதவியை எதிர்வரும் 11 ஆம் திகதி மஹிந்த ராஜபக்ஸ பொறுப்பேற்றால், பாராளுமன்றத்தில் எதிர்க் கட்சிப் பதவிக்கு எந்தவொரு பாதிப்பும் வரமாட்டாது எனவும், அவ்வாறு வந்தால் சட்ட ரீதியில் முகம்கொடுக்க தயாராகவே உள்ளதாகவும் அக்கட்சியின் தலைவர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.
ஆரம்பம் முதல் தமது கட்சிக்கு அவர் தான் தலைமை வகித்து வருகின்றார். எதிர்வரும் 11 ஆம் திகதி உத்தியோகபுர்வமாக அவர் பொறுப்பை ஏற்கப் போகின்றார். இது ஒரு பிரச்சினைக்குரிய விடயம் அல்ல. இருப்பினும், யாராவது சட்டப் பிரச்சினையை ஏற்படுத்தினால், அதற்கு முகம்கொடுக்க தயாராகவே உள்ளோம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினராகவே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ பாராளுமன்றத்தை அங்கத்துவம் வகிக்கின்றார். அவர் இன்னுமொரு கட்சியின் உறுப்புரிமையை பெற்றால், குறித்த கட்சிக்குரிய பாராளுமன்ற அங்கத்துவம் நீக்கப்பட சட்டத்தில் இடமுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தீர்மானமே இதன்போது அவரது உறுப்புரிமை தொடர்பில் தீர்மானம் எடுக்கும் சக்தியாக மாறுகின்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவராகவுள்ள ஜனாதிபதி விரும்பினால், உறுப்புரிமையை நீக்கவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment