ஆவா குழுவைச் சேர்ந்தவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் பலி - யாழில் சம்பவம்

மானிப்பாயில் வீடொன்றின் மீது தாக்கல் நடத்த சென்ற ஆவா குழுவைச் சேர்ந்தவரே பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தார் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
மானிப்பாய் - இணுவில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்தவர் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார்.
மற்றொருவர் படுகாயமடைந்தார். காயமடைந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவம் இன்றிரவு 8.40 மணியளவில் இடம்பெற்றது. “மானிப்பாய் பொலிஸ் பிரிவு மானிப்பாய் - இணுவில் வீதியில் ஆவா குழு தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருப்பதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்திருந்தது.
அதனால் மானிப்பாய், கோப்பாய், சுன்னாகம் மற்றும் கொடிகாமம் ஆகிய பொலிஸ் பிரிவுகள் இணைந்து ஆவா குழுவைக் கைது செய்ய சிறப்பு நடவடிக்கை எடுத்திருந்தது.
சிறப்பு அணி மானிப்பாய் - இணுவில் வீதியில் களமிறக்கப்பட்டிருந்தது. ஆவா குழுவைச் சேர்ந்தோர் வாள்களுடன் மோட்டார் சைக்கிள்களில் வந்தனர். அவர்களை வழிமறித்துக் கைது செய்ய பொலிஸார் முற்பட்டனர்.
3 மோட்டார் சைக்கிள்களில் 6 பேர் கொண்ட கும்பல் பயணித்ததாகவும் சுற்றுக்காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார் அவர்களை மறிக்க முற்பட்ட போதும் அவர்கள் நிறுத்தாத நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக அறிய முடிகிறது.
இத்துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றவர் படுகாயமடைந்த நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கஜேந்திர வாள் ஒன்று சம்பவ இடத்தில் மீட்கப்பட்டுள்ளது. மேலும் நால்வர் தப்பித்துள்ளனர். அவர்களைத் தேடி தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சம்பவத்தையடுத்து மானிப்பாய் பொலிஸாருடன் இணைந்து ஏனைய பொலிஸ் பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸாரும் அழைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன” என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment