ஒலிபெருக்கிப் பாவனையை கட்டுப்படுத்துங்கள் - வடக்கு ஆளுநர்

மாணவர்களின் நலனைக் கருத்திற்கொண்டு  ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துமாறு வைபவங்கள் மற்றும் விழாக்களை ஒழுங்குபடுத்துவோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் 

விடயம் தொடர்பில் ஆளுநரின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது.

தற்பொழுது கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்காக கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஒலிபெருக்கிகள் பல்வேறு வைபவங்களிலும் விழாக்களிலும் பயன்படுத்தப்படுவது அவதானிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மாணவர்களும் பெற்றோர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இவ்வாறான ஒலிபெருக்கிப் பாவனையை கட்டுப்படுத்துமாறு வைபவங்கள் மற்றும் விழாக்களை ஒழுங்குபடுத்துவோரிடம் வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார்.

இடையூறுகள் ஏற்படுத்தும் வகையில் இடம்பெறும் ஒலிபெருக்கிப் பாவனையைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உரிய ஒழுங்கு விதிகளையும் சட்ட ஏற்பாடுகளையும் அமுல்ப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளுமாறு வடமாகாணத்தின் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபருக்கும் ,  ஐந்து மாவட்ட அரசாங்க அதிபர்களுக்கும், மாகாண உள்ளுராட்சி ஆணையாளருக்கும் வடமாகாண ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

இம்முறை ஓகஸ்ட் 5 ஆம் திகதி ஆரம்பமாகும் உயர்தரப் பரீட்சை, ஓகஸ்ட் 31 ஆம் திகதி நிறைவுக்கு வருகின்றது. வடமாகாணத்தில் 15 ஆயிரத்து 213 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 3 ஆயிரத்து  857 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் இப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளனர். 

வடமாகாணத்தில்  217 பரீட்சை நிலையங்களில் உயர்தரப் பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது-என்றுள்ளது.


Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment