இலங்கையில் இந்து சமயத்துக்கு 3,000 வருடங்களுக்கு குறையாத வரலாறு இருக்கின்றது. ஆகவே எம் நாட்டுக்கு இந்து சைவம் புது வரவல்ல என்பதையும் இந்த இந்து – பௌத்த மகா சபைக்கு மிகத்திடமாக தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பீகாரில் நடைபெற்ற ‘தர்ம-தம்ம’ இந்து – பௌத்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘பழமைக்கு அடையாளமாக இலங்கையின் பஞ்ச ஈஸ்வரங்கள் அமைந்துள்ளன.
வடக்கில் நகுலேஸ்வரம், வடமேற்கில் திருக்கேதீஸ்வரம், கிழக்கில் திருக்கோணேஸ்வரம், மேற்கில் முன்னேஸ்வரம், தெற்கில் தொண்டீஸ்வரம் ஆகியவை இலங்கை தீவின் நான்கு திசைகளிலும் கடலை எல்லைகளாக கொண்ட மாவட்டங்களில் அமைந்துள்ளன.
இந்த மாநாட்டின் ‘தர்ம-தம்ம’ என்ற தலைப்பு என்னை கவர்ந்து விட்டது. ‘தர்ம’ என்பது சமஸ்கிருதம். ‘தம்ம’ என்பது பாளி. இரண்டு சொற்களினதும் அர்த்தங்கள் ஒன்றாகும். ‘தர்ம’ என்று இந்துக்கள் சொல்வதை, ‘தம்ம’ என்று பௌத்தர்கள் சொல்கிறார்கள்.
இந்து, பௌத்த நெறிகளுக்கு இடையில் வேறுபாடுகள் மிகச்சில. ஆனால் ஒருமைப்பாடுகள் அநேகம். இந்த பகிரங்க உண்மையை கணக்கில் எடுக்க, இலங்கையில் நாம் தவறி விட்டோம்.
இலங்கையில் இப்போது போர் ஓய்ந்து சமாதான யுகம் மெல்ல ஆரம்பித்துள்ளது. இந்த போரில் சிங்களம் பேசும் பௌத்தர்களும், தமிழ் பேசும் இந்துக்களும் பிரதான இரு தரப்புகளாக போரிட்டார்கள் என்பதை ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.
ஆகவே இன்று இலங்கையில் தேசிய ஐக்கியம் ஏற்பட வேண்டுமானால், முதலில் இந்துக்களும், பௌத்தர்களும் ஐக்கியப்பட வேண்டும். இந்த அடிப்படையில் இலங்கையில் இந்து-பௌத்த ஐக்கியத்தை நாம் ஏற்படுத்துவோம்.
இதன் அர்த்தம், இலங்கையில் இருக்கின்ற ஏனைய சகோதர மதங்களான கத்தோலிக்கம், இஸ்லாம் இரண்டையும் புறந்தள்ளுவது என்பதல்ல. முதற்கட்டமாக, ஒருமைப்பாடுகள் நிறைந்த இந்து, பௌத்த மதத்தவர்கள் ஐக்கியப்பட்டால், அது அடுத்த கட்டத்தில், அனைவரையும் அரவணைக்கின்ற, இலங்கையின் தேசிய ஐக்கியத்துக்கும் வழி வகுக்கும் என நான் நம்புகிறேன்.
சித்தார்த்த கௌதமன் தன் வாழ்நாளில் அதிக காலம் வாழ்ந்த இந்த நாலந்தா பூமிக்கு வரக்கிடைத்ததை இட்டு நானும், எனது சக அமைச்சர் காமினி ஜயவிக்கிரம பெரேராவும், எம் தூதுக்குழுவிலுள்ள தேரர்கள், நண்பர்கள் சார்பாக எனது மகிழ்சியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இம்மாநாட்டின் உள்ளக தலைப்பான, ‘சத்-சித்-ஆனந்தா-நிர்வாண்’ என்பதும் என்னை கவர்ந்து விட்டது. ‘சத்’ என்றால் உண்மை. ‘சித்’ என்றால் மனம். ‘ஆனந்தா’ என்றால் மகிழ்ச்சி அல்லது பேரானந்தம்.
இவை இன்றைய இலங்கைக்கு மிகவும் பொருத்தமானவை. ‘நிர்வாண்’ என்பதை விட்டு விடுகிறேன். அது பிறகு வரட்டும். ஏனென்றால் மற்ற மூன்றையும்தான் நாம் இலங்கையில் இப்போது செய்திட முயல்கிறோம்.
கடந்த கால தவறுகளை திரும்பி பார்த்து கற்று கொள்ள விரும்புகிறோம். அதற்கு உண்மை பேச வேண்டும். பிறகு, எங்களது அணுகுமுறைகளை மாற்ற வேண்டும். அதற்கு இலங்கையில் சிங்கள-தமிழ், இந்து-பௌத்த மனங்கள் மாற வேண்டும். இவை நடந்தால் இலங்கையில் பேரானந்தம்தான். இதற்காக பல சவால்களுக்கு மத்தியில் பாடுபடுகின்ற ஒருவன், நான்.
இந்த ‘தர்ம-தம்ம’ இந்து-பௌத்த நற்செய்தியை, இங்கு கிடைத்த புதிய அனுபவங்களுடன், நானும், காமினியும் இலங்கைக்கு கொண்டு செல்கிறோம். எங்களுக்கு உங்கள் அனைவரது ஒத்துழைப்புகளும் அவசியமாக தேவை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment