இயக்குநர் சங்கமா? கேளிக்கை விடுதியா?

தமிழ் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் 99வது பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் மூத்த இயக்குனர் பாரதிராஜா தலைவர் பதவிக்கு ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிற பதவிகளுக்கான தேர்தல் வரும் 14-ந்தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

பாரதிராஜா திடீர் என்று தான் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக கடந்த வாரம் அறிவித்தார். அவர் நெருக்கடிக்கு ஆளானதால் தான் ராஜினாமா செய்தார் என்று தகவல் பரவியது. பின்னர் தேர்தல் 21-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

இது குறித்து ஆலோசிக்க இயக்குனர் சங்கத்தின் 100-வது சிறப்பு பொது குழு கூட்டம் சென்னை கமலா திரையரங்கில் இன்று நடைபெற்றது. இதில் தற்போதைய தலைவர் விக்ரமன், பொருளாளர் பேரரசு, செயலாளர் ஆர்.கே. செல்வமணி, எஸ்பி.ஜனநாதன், கரு.பழனியப்பன் ஆகியோர் உள்பட பலர் பங்கேற்றனர். கரு.பழனியப்பன் பாரதிராஜா நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். 

அவர் பேசும்போது, ‘இயக்குநர் சங்க பொதுக்குழுவிற்கு பெரும்பாலும் வராத பாரதிராஜா கடந்தமுறை மட்டுமே வந்தார். பாரதிராஜாவால் தான் தமிழ் சினிமாவின் முகம் மாறியது. அதற்காக அவரை சாமியாக கும்பிட வேண்டும் என அவரே விரும்பியதில்லை. அவரை இங்கு அழைத்து வந்து அவமானப்படுத்த வேண்டாம்’என்றார். 

மேலும் கரு.பழனியப்பன் பேசும்போது, இயக்குநர் சங்கமா? கேளிக்கை விடுதியா? என்று கேட்டதுடன் இயக்குநர் சங்கத்துக்குள் ஏராளமான காலி மது பாட்டில்கள் உள்ளன என்றும் சுட்டிக்காட்டினார். இந்த கருத்துக்கு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. உறுப்பினர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு ரகளை ஆனதாக தெரிகிறது. பொதுக்குழு தொடர்ந்து நடைபெற்றது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment