ஊழியர்களுக்கு, சம்பளம் தர முடியாத நிலையில், கூட்டுறவு சங்கங்கள், நிதி நெருக்கடியில் தவிக்கின்றன.கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு மொத்த பண்டக சாலைகள் சார்பில், பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள், பெட்ரோல் பங்க், காய்கறி கடைகள் நடத்தப்படுகின்றன.
அதிகாரிகள் மற்றும் கூட்டுறவு சங்க தலைவர்களாக உள்ள ஆளுங்கட்சியினரின் அலட்சியத்தால், பல சங்கங்கள், நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளன. இதனால், சங்கங்களால், ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியவில்லை.இது குறித்து, சங்க ஊழியர்கள் கூறியதாவது:கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடைகளையும் நடத்துகின்றன. பல்பொருள் அங்காடிகள், காய்கறி கடைகளில், எதிர்பார்த்த அளவு வியாபாரம் நடப்பதில்லை. இதனால், லாபமும் கிடைப்பதில்லை.அரசால், நேரடியாக மக்களுக்கு வழங்க முடியாத வேலைவாய்ப்பை, கூட்டுறவு சங்கங்கள் ஏற்படுத்தி வருகின்றன. ரேஷன் கடைகளில், கட்டுப்பாடற்ற பிரிவின் கீழ், மளிகை பொருட்கள், எண்ணெய் போன்றவை விற்றால் தான் சம்பளம் வழங்கப்படும் என, ஊழியர்களை, அதிகாரிகள் மிரட்டுகின்றனர்.
பல சங்கங்கள், நிதி நெருக்கடியில் இருப்பதால், ஊழியர்களுக்கு சம்பளமும், ஒழுங்காக வழங்குவதில்லை. ரேஷன் கடை செலவினங்களை எதிர்கொள்ள மட்டும், கூட்டுறவு சங்கங்களுக்கு, அரசு மானியமாக, நிதி உதவி செய்கிறது.அதேபோல், சங்கங்களின், மற்ற வியாபார நடவடிக்கைகளின் செலவுகளுக்கும், அரசு நிதி உதவி செய்ய வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
0 comments:
Post a Comment