ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இடம்பெற்ற கூட்டத்துக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்குத் தான் நேரடியாக அழைப்பு விடுக்கவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தான் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு ஜனாதிபதியுடனான சந்திப்பு குறித்து தெரியப்படுத்தவில்லை என்றும் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரனுக்கு அறிவித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அதை அந்தக் கட்சியின் உத்தியோகபூர்வ அழைப்பாக எடுத்துக்கொள்வார்கள் என்று தான் நினைத்ததாகவும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.
கன்னியா விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து ஜனாதிபதிக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்றை அமைச்சர் மனோ கணேசன் ஏற்பாடு செய்திருந்தார்.
இந்த சந்திப்பு தொடர்பாக கடந்த புதன்கிழமை இரவு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனோ கணேசனால் அறிவிக்கப்பட்டது.
எனினும் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்கவில்லை.
இந்நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எந்தவொரு தரப்பினரும் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை. அதன் காரணமாகவே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்துகொள்ளவில்லை என கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment