கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டம் ஒன்றுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டே இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்துடன், சுடறேற்றி அகவணக்கத்துடன் மலரஞ்சலி செலுத்தப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் தமிழர்களை இலக்கு வைத்து கடந்த 1983ஆம் ஆண்டு ஜுலை மாதம் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு 36 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன.
இந்தநிலையிலேயே கறுப்பு ஜுலை நினைவேந்தலினை முன்னிட்டு கனேடிய பிரதமருக்கு தபால் அட்டை அனுப்பும் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
‘இலங்கைத்தீவில் ஆட்சியாளர்களினால், சிங்கள அரசினால் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கறுப்பு ஜுலை – 1983 தமிழினப்படுகொலை நடைபெற்று 36 ஆண்டுகள் தொட்டு விட்டன.
காலம் பல கடந்து சென்றாலும் ஈழத் தமிழர் தேசத்தின் அரசியல் ஆன்மாவில் ஓர் பெரும் துயர வடுவாக நிலைத்திருப்பதோடு, என்ன விலை கொடுத்தேனும் அரசியல் சுதந்திரத்தை அடைந்தே தீர வேண்டும் என்ற பற்றுறுதியை தமிழர் தேசத்திடம் கறுப்பு ஜுலை நினைவுகள் விதைத்திருக்கின்றன.
கறுப்பு ஜுலை என்பது இரு இனங்களுக்கிடையே நடந்த ஒரு கலவரம் அல்ல. அது ஒரு இனத்தின் மீது இன்னொரு இனத்தின் அரசினால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படுகொலையாகும்.
1983 கறுப்பு ஜுலை இனப்படுகொலை ஈழத்தமிழர்களுக்கு ஒரு செய்தியைத் தெளிவாகச் சொல்லியிருக்கிறது. இரத்தம் தோய்ந்த சிங்கள பௌத்த இன மேலாதிக்க அரசிடமிருந்து பிரிந்து சென்று சுதந்திர அரசை அமையுங்கள்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment