விஸ்வரூபம் எடுக்கும் ‘மத்தியஸ்தம்’ விவகாரம்

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையே மத்தியஸ்தம் செய்து வைக்க அமெரிக்க அதிபர் டிரம்பின் உதவியை இந்திய பிரதமர் மோடி கேட்டதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், ‘டிரம்ப்பின் உதவியை மோடி ஒரு போதும் கோரவில்லை’ என வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை இம்ரான் கான் சந்தித்து பேசினார்.
அப்போது, நிதியுதவி, தொழில் முதலீடு, தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இரு தலைவர்களும் பேசிக்கொண்டனர். தொடர்ந்து, செய்தியாளர்களிடம் டிரம்ப் ேபசுகையில், ‘‘2 வாரங்களுக்கு முன் ஜப்பானில் மோடியை சந்தித்த போது, காஷ்மீர் பிரச்னை பல ஆண்டுகளாக  நீடித்துக்கொண்டுள்ளது.


அதில் மத்தியஸ்தம் செய்ய விருப்பமா? என்று என்னை கேட்டார். இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் சேர்ந்து என்னை மத்தியஸ்தத்திற்கு அழைத்தால் அதற்கு தயாராக இருக்கிறேன்’’ என்று தெரிவித்ததாக கூறினார்.அப்போது அருகில் அமர்ந்திருந்த இம்ரான் கான், ‘‘காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ய முன் வந்தால் பாகிஸ்தான் அதை வரவேற்கும்’’ என்றார். இருநாட்டு தலைவர்களின் பேச்சு இந்தியா, பாகிஸ்தான் ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
இதற்கிடையில் இவ்விவகாரத்தில் இந்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் ஒன்றை வெளியிட்டார். அதில், ‘காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்து வைக்கும்படி டிரம்ப்பிடம் பிரதமர் மோடி ஒரு போதும் கேட்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே அமெரிக்க எதிர்க்கட்சி எம்பி பிரட் ஷெர்மேன் வெளியிட்ட செய்தியில், ‘பாகிஸ்தானுடன் உள்ள பிரச்னைகளை இரு நாடுகளும் தங்களுக்குள் மட்டுமே பேச வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இந்தியா உறுதியாக உள்ளது.
சிம்லா ஒப்பந்தம் மற்றும் லாகூர் பிரகடனம் அடிப்படையிலேயே இரு நாட்டு பிரச்னைகளுக்குகான தீர்வு இருக்கும். காஷ்மீர் விஷயத்தில் இந்தியாவின் கொள்கை என்ன என்பது உலகுக்கே தெரியும்.
 
ஆனால், அமெரிக்காவின் தலையீட்டை மோடி நாடினார் என்ற டிரம்ப்பின் பேச்சு சிறுபிள்ளைத்தனமானது. அவர் மனக்குழப்பத்தில் பேசியுள்ளது போல் உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.

இருப்பினும், இம்ரான்கான் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கையில், காஷ்மீர் பற்றிய டிரம்ப்பின் சமரச முயற்சி குறித்து குறிப்பிடப்படவில்லை.
இதனிடையே, ‘பாகிஸ்தானுடனான காஷ்மீர் பிரச்னையில் மூன்றாம் நபர் தலையீட்டை இந்தியா கொள்கையளவில் விரும்பவில்லை என்ற நிலைப்பாட்டை மத்திய அரசு மாற்றிக் கொண்டதா?’ என்று காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கேள்வி எழுப்பி உள்ளார். காஷ்மீர் பிரச்னையில் பிரதமர் மோடி குறித்து, அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கருத்துகள் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment