கம்பஹா பிரதேசத்தில் பெண்ணொருவரின் உடம்பில் விரியன் பாம்பை போட்டு தீண்ட செய்து கொலை செய்ய முயற்சித்த பெண்ணொருவரை கம்பஹா தலைமையக பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண், கொலை செய்ய முயற்சித்த பெண்ணின் கணவருடன் தவறான உறவில் இருந்து வந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த 30ஆம் திகதி பாம்பாட்டி ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபாயை வழங்குவதாக உறுதியளித்து, விரியன் பாம்பு ஒன்றை கொண்டு வருமாறு கூறி, அந்த நபரை பயண்படுத்தி, குறித்த பெண்ணின் மீது இரண்டு முறை பாம்பை போட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவத்தில் பெண்ணுக்கு எந்த பாதிப்பு ஏற்படாது அவர் தப்பித்துள்ளார். பாம்பாட்டியை கம்பஹா பொலிஸ் நிலையத்தின் குற்ற விசாரணைப் பிரிவினர் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தியுள்ளதுடன் அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இதற்கு உடந்தையாக இருந்த பெண்ணின் கணவரான 54 வயதான நபர் பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்றுள்ளார். அவரை கைது செய்ய விசாரணை நடத்தப்பட்ட போது, அந்த நபருடன் தவறான உறவை வைத்திருந்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கம்பஹாவை சேர்ந்த 42 வயதான பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். தான், குறித்த நபர் நடத்தி வரும் காலணி தயாரிப்பு தொழிற்சாலையில் உதவியாளராக இருந்து வருவதாகவும் அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளதாகவும் இந்த பெண் விசாரணைகளின் போது கூறியுள்ளார்.
பெண்ணை கொலை செய்யும் முயற்சியுடன் இந்த பெண்ணுக்கு தொடர்பு உள்ளதா என்பதை அறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட பெண் இன்று நீதவான் முன்னிலையில், ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். தப்பிச் சென்றுள்ள நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments:
Post a Comment