சரீஆ சட்டம் என்ற போர்வையில் பெரும்பான்மை சமூகத்தின் சிந்தனையில் முஸ்லிம்கள் தொடர்பில் பேய் போன்ற எண்ணக்கருவொன்றை உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்காக அரசியல்வாதிகள், அடிப்படைவாதிகள், இனவாதிகள் என பலரும் செயற்பட்டு வருவதாகவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் ஊடகப் பேச்சாளர் அஷ்செய்க் பாஸில் பாரூக் தெரிவித்துள்ளார்.
சரீஆ சட்டத்தில் கை வைக்க எவருக்கும் இடமளிக்கப் போவதில்லையென மேல் மாகாண சபையின் முன்னாள் ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்துள்ள கருத்துக் குறித்து சகோதர மொழி ஊடகமொன்று வினவிய போதே அஷ்செய்க் பாஸில் பாரூக் இதனைக் கூறியுள்ளார்.
முஸ்லிம் விவாக சட்டம் தொடர்பான விடத்தை சரீஆ சட்டம் என்ற பெயரில் அரசியல் இலாபத்துக்குப் பயன்படுத்த முனைகின்றனர். நாம் முஸ்லிம் சமூகம் என்ற வகையில் அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும், பயங்கரவாதிகளுக்கு எதிராகவும், இனவாதிகளுக்கு எதிராகவும் செயற்படுகின்றோம்.
சரீஆ சட்டம் தொடர்பில் பௌத்த சமூகத்தின் மத்தியில் அச்சத்தையும், சந்தேகத்தையும் ஏற்படுத்தி, இந்நாட்டில் வாழும் முஸ்லிம்களுக்கு எதிராக குரோதத்தையும், எதிர்ப்பையும் தூண்டி விடுவது இதன் உள்நோக்கமாகும். அரசியலில் வாக்குப் பெட்டியை இலக்கு வைத்து இது முன்னெடுக்கப்படுகின்றது.
இது குறித்து முஸ்லிம் சமூகம் என்ற வகையில் நாம் அவதானத்துடன் செயற்படுதல் வேண்டும். முழு இலங்கை மக்களும் இந்த சிந்தனைக்கு அடிமையாகமலும், சிக்கிக் கொள்ளாமலும் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கின்றேன்.
சரீஆ சட்டம் என்பது ஒரு மனிதன் தனது அன்றாட வாழ்வில் முஸ்லிமாக எப்படி செயற்படுவது என்பது தொடர்பான ஒழுங்குகள் ஆகும். எமது நாட்டில் சரீஆ சட்டம் என்று கூறியவுடன் பெரும்பாலானவர்கள் முஸ்லிம் குற்றவியல் சட்டத்தையே நோக்குகின்றனர். இந்த நாட்டில் முஸ்லிம்களின் குற்றவியல் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற நோக்கமோ, எதிர்பார்ப்போ யாருக்கும் இல்லை.
முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் எந்த நாட்டிலாவது இந்த முஸ்லிம் குற்றவியல் தண்டனைச் சட்டம் நடைமுறையில் இருக்கின்றதா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். அவ்வாறு கொண்டுவருவதும் தடுக்கப்பட்ட ஒன்றாகும். முஸ்லிம் நாடு ஒன்றில், முஸ்லிம் அரசாங்கத்தின் கீழ் அந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்பதுவே தெளிவான கருத்தாகும் எனவும் அவர் மேலும் விளக்கமளித்துள்ளார்.
0 comments:
Post a Comment