அமெரிக்கா முன்வைத்துள்ள சோபா உடன்பாட்டின் உள்ளடக்கம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக இரண்டு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.
இந்தக் குழுக்களை எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நியமித்துள்ளார்.
அதற்கமைய சோபா உடன்பாட்டினால் அரசியல், பொருளாதாரம் மற்றும் சமூக ரீதியாக நாட்டுக்கு ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஆராய ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமையிலான இந்தக் குழுவில், வெளிநாட்டு உறவுகள் மற்றும் கொள்கைசார் நிபுணர்கள் நால்வர் இடம்பெற்றுள்ளனர்.
இரண்டாவது குழு, சோபா உடன்பாட்டினால், நாட்டின் சட்டத்துறையில் ஏற்படக்கூடிய தாக்கங்களை ஆய்வு செய்து அறிக்கை ஒன்றை தயாரிக்கவுள்ளது. இந்தக் குழுவில் மூன்று அதிபர் சட்டவாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
நாளை இந்தக் குழுவினர் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை சந்திக்கவுள்ளனர். அத்தோடு ஒரு வாரத்துக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.
இதேவேளை, சோபா உடன்பாடு குறித்து முதன் முதலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்துடனேயே அமெரிக்கா பேச்சு நடத்தியதென அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்திருந்ததோடு, அன்று அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தற்போது அதற்கு எதிர்ப்புத் தெரிவிப்பது முரணானது என்றும் தெரிவித்திருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
எவ்வாறாயினும், அமெரிக்கா முன்மொழிந்துள்ள சோபா ஒப்பந்தத்தை முழுமையாக எதிர்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment