ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான அனைத்து ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக, பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார்.
இப் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரங்கள், (15) திங்கட்கிழமை தபாலில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், இந்நடவடிக்கை, எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவு பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள க.பொ.த. உயர்தரப் பரீட்சை, பழைய மற்றும் புதிய சிபார்சுகளின் அடிப்படையில் இடம்பெறுவதுடன், இம்முறை இப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்து 30 ஆயிரத்து 704 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
நாடு முழுவதிலும் 2675 பரீட்சை மத்திய நிலையங்களில் இப்பரீட்சை இடம்பெறுவதுடன், இப்பரீட்சைக்காக 315 இணைப்பு மத்திய நிலையங்களும் அமைக்கப்படவுள்ளன.
இதேவேளை, பிரதேச மட்டத்தில் 38 மத்திய நிலையங்களை ஒன்று திரட்டும் மத்திய நிலையங்களாக முன்னெடுப்பதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தவிர, க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தேவையான பணியாளர்களுக்கான பயிற்சி நடவடிக்கைகள், எதிர்வரும் (18) வியாழக்கிழமை ஆரம்பிக்கப்படும் என்றும், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
0 comments:
Post a Comment