மக்கள் விடுதலை முன்னணியால் அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை நேற்றுத் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் கிடைத்தன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணையை எதிர்த்து அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால் குறித்த பிரேரணை 27 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்தது.
இலங்கையில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்று பிரதமர் மற்றும் அமைச்சரவை உள்ளிட்ட ஒட்டுமொத்த அரசும் பதவி விலக வேண்டும் எனக் கோரி மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த இந்தப் பிரேரணை மீது நேற்று முன்தினமும் நேற்றும் விவாதங்கள் நடைபெற்றன.
விவாதங்களையடுத்து நேற்று மாலை 6.30 மணியளவில் பிரேரணை மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் அதன் பங்காளிக் கட்சிகள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தனர்.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொது எதிரணியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர். சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் பலரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
ஆனால், துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் சிலர் வாக்களிப்பின்போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
அதேவேளை, எதிர்க்கட்சி வரிசையிலுள்ள ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் பொதுச்செயலர் சிவசக்தி ஆனந்தன் ஆகியோரும் வாக்களிப்பின்போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
ஐக்கிய தேசியக் கட்சியின் பங்காளிக் கட்சியான தமிழ் முற்போக்குக் கூட்டணியைச் சேர்ந்த அமைச்சர் வே.இராதாகிருஷ்ணனும் வாக்களிப்பின்போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை.
ஆனால், எதிர்க்கட்சி வரிசையிலுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசை எதிர்த்து பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
கடந்த வருடம் ஒக்டோபர் 26 அரசியல் சதிப் புரட்சியின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலிருந்து மைத்திரி அணிப் பக்கம் தாவிய மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரனும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்தார்.
கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அரசு மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களித்தனர்.
குறித்த பிரேரணைக்கு எதிராக அதிக வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரரணை தோல்வியடைந்துள்ளது எனச் சபாநாயகர் கருஜயசூரிய சபையில் அறிவித்தார். இதையடுத்து இன்று வெள்ளிக்கிழமை முற்பகல்வரை நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment