தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதா கொண்டு வர என்ன காரணம்?

தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதாவை மத்திய அரசு ஏன் கொண்டு வந்துள்ளது, இந்த மசோதாவை தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் எதிர்க்க என்ன காரணம் என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
நாட்டிலுள்ள 5344 பெரிய அணைகளில் 293 அணைகள் நூறு ஆண்டுகளை கடந்தவை. 1041 அணைகள் 50 முதல் 100 ஆண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்டவை. மேலும் 92 சதவிகித அணைகள், இரு மாநிலங்களுக்கு இடையே பாயும் ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ளன. அணைகளில் இருந்து நீர் திறப்பதில் இரு மாநிலங்களுக்கு இடையே பிரச்சனை ஏற்படுவதையும், பழைய அணைகளுக்கு பதிலாக புதிய அணை கட்டுவதில் மாநிலங்களுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவதையும் மத்திய அரசு களைய திட்டமிட்டுள்ளது. மேலும் அணைகளின் பாதுகாப்பில் போதிய அக்கறை இல்லாத சூழலால் வெள்ள அபாயம் ஏற்படுவதையும் மத்திய அரசு கருத்தில் கொண்டுள்ளது. இதுபோன்ற பிரச்சனைகளை தீர்க்க தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதா கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகவத் தெரிவித்துள்ளார்.
தேசிய அணைகள் பாதுகாப்பு மசோதா மூலம் நாட்டிலுள்ள அணைகள் அனைத்திலும் ஒன்று போல பராமரிப்பு, பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ள வழி வகை உருவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். அணைகளில் கண்காணிப்பு, ஆய்வு, பராமரிப்பு, பேரிடர் காலத்தை எதிர்கொள்வது, பாதுகாப்பை உறுதி செய்வது உள்ளிட்டவற்றை நாடு முழுக்க ஒன்று போல நடைமுறைப் படுத்தப்படும் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுக்க உள்ள சிறப்பு கட்டுமானம் கொண்ட அணைகள், 10 மீட்டருக்கு மேல் உயரம் கொண்ட அணைகள் அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும்.
இந்த மசோதா மூலம் தேசிய அணைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்படும். இந்தக் குழு, அணைகளின் பாதுகாப்பிற்கான கொள்கைகளை வகுக்கும். பெரிய அணைகளில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வழிவகைகளை வகுத்துக் கொடுக்கும். தேவையான பரிந்துரைகளை அவ்வப்போது வழங்கும். பாதுகாப்பு குழு உருவாக்கிய அணைகள் பாதுகாப்பிற்கான கொள்கை, வழிகாட்டு நெறிமுறைகள், தரமேம்பாடு உள்ளிட்டவற்றை செயல்படுத்த தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்படும்.
மேலும் மாநில அரசுகளும் அணைகள் பாதுகாப்பிற்கான குழுக்களை அமைக்க வேண்டும். மாநில அரசின் குழுக்கள், மத்திய அரசின் அணைகள் பாதுகாப்பு ஆணையத்துடன் இணைந்து செயல்படும் என்றும் மசோதாவில் கூறப்பட்டுள்ளது. மேலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் அணைகளை பார்வையிட்டு ஆய்வு செய்வது, அவசரகால திட்டங்கள் வகுப்பது, பாரமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிக்காக நிதியை பராமரிப்பது, பாதுகாப்பு நெறிமுறைகளை வகுப்பது உள்ளிட்டவற்றையும், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையம் மேற்கொள்ளும் என மசோதாவில் கூறப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை, வேறு ஒரு மாநிலத்தில் இருந்தால், அந்த அணையை பாதுகாத்து, பராமரிக்கும் உரிமையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையமே தனது வசம் ஏற்கும் என்றும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அணைகள் பாதுகாப்பு மசோதா கடந்த 2010-ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, நிலைக்குழுவுக்கு அனுப்பப் பட்டது. 2011-ஆம் ஆண்டு நிலைக்குழு, இந்த மசோதா குறித்த அறிக்கையை தாக்கல் செய்த து. ஆனாலும் இந்த மசோதாவுக்கு மாநில அரசுகளும், எதிர்க்கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்த தால், இரு முறைதாக்கல் செய்ய போதும் மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இந்நிலையில் தான் இப்போது மூன்றாவது முறையாக மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை மாநில அரசுகளும், எதிர்க்கட்சிகளும் எதிர்க்க பல்வேறு காரணங்களை முன் வைத்துள்ளன.
நீர், நிலம் உள்ளிட்டவை மாநில அரசுகளின் அதிகாரத்தின் கீழ் உள்ளன. எனவே மாநில அரசுகளின் உரிமையை பறிப்பது போல மசோதா உள்ளதால் மாநில அரசுகள் கடும் எதிர்ப்பதை தெரிவிக்கின்றன. மேலும் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக மசோதா உள்ளது என்றும் மாநில அரசுகள் குற்றம் சாட்டி உள்ளன. இந்த மசோதாவுக்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. மசோதாவின் 23(1) பிரிவின் படி, ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை, வேறு ஒரு மாநிலத்தில் இருந்தால், அந்த அணையை பாதுகாத்து, பராமரிக்கும் உரிமையை தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையமே தனது வசம் ஏற்கும் என்பதை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது. ஏனென்றால், 
தமிழகத்துக்குச் சொந்தமான முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், துன்னகடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகள் கேரளாவில் உள்ளன.

மாநிலங்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் அடிப்படையில் இந்த நான்கு அணைகளையும் தமிழ்நாடு அரசு தான் நிர்வகித்துப் பராமரித்து வருகிறது. மத்திய அரசு கொண்டுவரும் இந்தப் புதிய மசோதா, தமிழகத்துக்குச் சொந்தமான 4 அணைகளையும் மத்திய அரசு தனது கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள வழிவகுக்கும். இதனால் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். இதே போன்று கர்நாடகம், கேரளா, ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களும் , மாநில அரசுகளின் இறையாண்மைக்கு எதிராக மசோதா உள்ளதாக கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment