நிலவிவரும் சீரற்ற காலநிலையினால் நாட்டிலும் நாட்டைச்சூழவுள்ள கடல் பிரதேசத்திலும் பலத்த காற்று வீசக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனால் மீனவர்களை நாளை 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை வரை கடலுக்குச் செல்ல வேண்டாமெனவும் திணைக்களம் எச்சரித்துள்ளது.
காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 80 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என்பதால் பொதுமக்களையும் கடற்படையினரையும் விழிப்புணர்வுடன் இருக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பாக கடற்கரை பிரதேசங்களில் குடிசை வீடுகளில் வாழ்வோர் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களை நோக்கிச் செல்லுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அத்துடன் வீடுகளின் கூரைத் தகடுகள் மற்றும் பாரிய விளம்பரப்பலகைகள் தூக்கி எறியப்படலாம் என்பதால் இதனால் இடம்பெறக்கூடிய உயிர், உடமை சேதங்களை தவிர்க்க முயற்சிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த காலநிலையினால் கரையோரங்களிலுள்ள தாழ்வான பிரதேசங்கள் கடல் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
எச்சந்தர்ப்பத்திலும் பலத்த காற்று வீசலாம் என்பதால் மலைப்பிரதேசங்களிலும் கரையோரங்களிலும் வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்படுகின்றனர்.
இதேநேரம் காலநிலை சீரற்று இருப்பதனால் நிலைமை வழமைக்கு திரும்பும்வரை அநாவசியமாக வீதிகளில் இருப்பதனையும் தூர இடங்களுக்கு பயணம் செய்வதனையும் தவிர்த்துக் கொள்ளுமாறும் பொது மக்கள் கேட்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் வீதிகளில் அல்லது வீடுகளுக்கு மேல் முறிந்து கிடக்கும் மரங்கள் மற்றும் மின்கம்பிகளால் மின்சாரத் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதை பொதுமக்கள் நினைவில் நிறுத்திக் கொள்வது அவசியமென்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பலத்த காற்று வீசுவதற்கான வாய்ப்பு உள்ளபோதும் வடமேல், மேல் மற்றும் தென் மாகாண கடல் பிரதேசங்களில் காற்றின் வேகம் கடுமையாக இருக்குமென அறியப்பட்டுள்ளது.
நாட்டின் மேல், தெற்கு, மத்திய, சபரகமுவ,வடமேல்,வட மத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 70 தொடக்கம் 80 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும் இதனைத் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்துக்கு 50 தொடக்கம் 60 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசுமென்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment