தென்னாபிரிக்க வளர்ந்துவரும் வீரர்களுக்கு எதிரான முதலாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இலங்கை வளர்ந்துவரும் அணி வெற்றிக்காக கடைசி விக்கெட் வரை போராடிய நிலையில் 28 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
பிச்சப்ஸ்ட்ரூம், சென்வெஸ்பார்க் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நான்காவது மற்றும் கடைசி நாளான இன்று (21) 331 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடர்ந்ந இலங்கை வளர்ந்து வரும் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்து தடுமாற்றத்தை சந்தித்தது.
இதன்படி 145 ஓட்டங்களுக்கு 1 விக்கெட்டை இழந்த நிலையில் தமது இரண்டாம் இன்னிங்சைத் தொடர்ந்த இலங்கை அணி மேலும் 14 ஓட்டங்களை பெறுவற்குள் இரண்டாவது விக்கெட்டை பறிகொடுத்தது. சிறப்பாக துடுப்பாடிவந்த மினோத் பானுக்க 89 ஓட்டங்களை பெற்று வெளியேறினார்.
அடுத்து வந்த சரித் அசலங்க 9 ஓட்டங்களுடன் வெளியேறியதோடு, அஷேன் பண்டார வந்த வேகத்தில் ஒரு ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார். இந்நிலையில் சிறப்பாக துடுப்பாடிய பத்தும் நிஸ்ஸங்கவும் 117 பந்துகளில் 47 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தபோது இலங்கை அணி நெருக்கடிக்கு உள்ளானது.
மத்திய பின்வரிசை வீரர்களும் சோபிக்கத் தவறிய நிலையில் இலங்கை வளர்ந்துவரும் அணி 214 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தபோது கடைசி வரிசையில் இணைந்த மொஹமட் சிராஸ் மற்றும் நிஷான் பீரிஸ் 58 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று நம்பிக்கை தந்தனர்.
எனினும் சிறப்பாக துடுப்பாடி வந்த மொஹமட் சிராஸ் 96 பந்துகளில் 7 பௌண்டரிகளுடன் 49 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்த நிலையில் இலங்கை அணியின் எதிர்பார்ப்பு சிதறியது.
இறுதியில் இலங்கை வளர்ந்து வரும் அணி 94.1 ஓவர்களில் 302 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்து நூலிழையில் வெற்றியை தவறவிட்டது.
தென்னாபிரிக்க வளர்ந்துவரும் வீரர்கள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான நன்ட்ரே பர்கர் மற்றும் ட்லாடி பொகாகோ தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க வளர்ந்துவரும் வீரர்கள் முதல் இன்னிங்ஸுக்காக 382 ஓட்டங்களை பெற்றதோடு தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை வளர்ந்து வரும் அணி 241 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது.
இந்நிலையில் முதல் இன்னிங்ஸில் 141 ஓட்டங்களால் முன்னிலை பெற்று இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த தென்னாபிரிக்க வளர்ந்துவரும் அணியின் துடுப்பாட்ட வரிசையை சிதறடித்த இலங்கை பந்துவீச்சாளர்கள் அந்த அணியை 189 ஓட்டங்களுக்கே சுருட்டியது.
இதன்போது சுழற்பந்து வீச்சாளர் லசித் எம்புல்தெனிய 5 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு அசித்த பெர்னாண்டோ 3 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இலங்கை வளர்ந்துவரும் அணிக்கும் தென்னாபிரிக்க வளர்ந்துவரும் வீரர்கள் அணிக்கும் இடையிலான இரண்டாவது மற்றும் கடைசி உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டி எதிர்வரும் வியாழக்கிழமை (25) பிரெடோரியாவில் ஆரம்பமாகவுள்ளது.
0 comments:
Post a Comment