ஜடேஜாவின் போராட்டம் வீண்

உலகக் கோப்பை அரையிறுதியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்து வெற்றி பெற்றது.
இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 8 விக்கெட் இழப்பிற்கு 239 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 240 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். டிரென்ட் போல்ட், ஹென்ரி தொடக்க ஓவர்களை வீசினர்.
இருவரது பந்து வீச்சையும் எதிர்கொள்ள ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் திணறினர். 2-வது ஓவரை ஹென்ரி வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ரோகித் சர்மா 1 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த விராட் கோலி 3-வது ஓவரின் 4-வது பநதில் எல்.பி.டபிள்யூ ஆனார். 4-வது ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் ஆட்டமிழந்தார். மூன்று பேரும் தலா ஒரு ரன்னில் ஆட்டமிழந்தனர். இதனால் இந்தியா 3.1 ஓவரில் 5 ரன்னுக்குள் 3 விக்கெட்டுக்களை இழந்து பரிதாபத்திற்குள்ளானது.
அடுத்து ரிஷப் பந்த் உடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடும் என்று ரசிர்கள் எதிர்பார்த்த நிலையில் தினேஷ் கார்த்திக் 10-வது ஓவரின் கடைசி பந்தில் 6 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 24 ரன்கள் எடுத்திருந்தது.
ஐந்தாவது விக்கெட்டுக்கு ரிஷப் பந்த் உடன் ஹர்திக் பாண்டியா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை மீட்க கடுமையாக போராடியது. இருவரும் ஓரளவிற்கு தாக்குப்பிடித்து ரன்கள் சேர்த்தனர். இதனால் போட்டி மெதுவாக இந்தியா பக்கம் திரும்பியது. அப்போது நியூசிலாந்து சான்ட்னெரை களம் இறக்கியது. ரிஷப் பந்த் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சான்ட்னெர் பந்தில் ஆட்டமிழந்தார். இந்தியா அப்போது 22.5 ஓவரில் 71 ரன்கள் எடுத்திருந்தது. ரிஷப் பந்த் ஆட்டமிழந்ததும் போட்டி இந்தியா கையை விட்டு நழுவிச் சென்றது. ரிஷப் பந்த் - ஹர்திக் பாண்டியா ஜோடி 5-வது விக்கெட்டுக்கு 12.5 ஓவரில் 47 ரன்கள் சேர்த்தது.
6-வது விக்கெட்டுக்கு ஹர்திக் பாண்டியாவுடன் டோனி ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்டியா 32 ரன்கள் எடுத்த நிலையில் சிக்சர் அடிக்க ஆசைப்பட்டு சான்ட்னெர் பந்தில் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 30.3 ஓவரில் 92 ரன்கள் எடுத்திருந்தது. 7-வது விக்கெட்டுக்கு டோனியுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். டோனி ஒரு பக்கத்தில் நிலைத்து நிற்க ஜடேஜா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 39 பந்தில் 3 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.  ஜடேஜாவின் அதிரடியால் போட்டி பரபரப்புக்குள்ளானது. ஓவருக்கு 10 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலை ஏற்பட்டது. கடைசி நான்கு ஓவரில் 42 ரன்கள் தேவைப்பட்டது. ஹென்ரி 47-வது ஓவரை வீசினார். இந்த ஓவரில் இந்தியா ஐந்து ரன்களே எடுத்தது. நியூசிலாந்துக்கு இந்த ஓவர் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. இந்தியாவுக்கு கடைசி மூன்று ஓவரில் 37 ரன்கள் தேவைப்பட்டது. 48-வது ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் நான்கு பந்தில் ஐந்து ரன்களே எடுத்தனர். ஐந்தாவது பந்தை ஜடேஜா தூக்கி அடிக்க முயன்றார். ஆனால் கேன் வில்லியம்சனிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 59 பந்தில் 77 ரன்கள் சேர்த்தார்.
49-வது ஓவரை பெர்குசன் வீசினார். முதல் பந்தை டோனி சிக்சருக்கு தூக்கினார். ஆனால் துரதிஷ்டவசமாக 3-வது பந்தில் ரன்அவுட் ஆனார். அத்துடன் இந்தியாவின் தோல்வி உறுதியானது. டோனி 72 பந்தில் 50 ரன்கள் சேர்த்தார். கடைசி பந்தில் புவனேஷ்வர் குமார் போல்டானார். கடைசி ஓவரில் சாஹல் ஆட்டமிழக்க இந்தியா 49.3 ஓவரில் 221 ரன்கள் அடித்து ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment