கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் எடுக்க வேண்டிய அத்தனை நடவடிக்கையையும் நிறைவேற்றியுள்ள நிலையில், முதுகெலும்பில்லாதவர் என தன்மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதாயின் நிச்சயமாக அதன்பின்னால் அரசியல் உள்நோக்கம் காணப்படுவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
தாக்குதல் இடம்பெற்று 3 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் உரிய விசாரணை முன்னெடுக்கப்படவில்லையெனவும், நாட்டின் தலைவர்களுக்கு முதுகெலும்பு இல்லையெனவும் இதுபோன்ற தலைவர்களை கட்டாயம் அரசியலைவிட்டுவிட்டு வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனவும் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
தேர்தல் ஒன்றின் மூலம் வெற்றிபெற்று குறிப்பிட்ட காலத்துக்கு பொறுப்புக்கு வந்துள்ளவர்கள், அவர்களது காலம் முடிவடைந்த பின்னர் வீடு செல்ல வேண்டும் என யாரும் குறிப்பிடத் தேவையில்லை. தேவைப்பட்டால் மீண்டும் தேர்தல் ஒன்றுக்கு முகம் கொடுப்பேன் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுட்டிக்காட்டினார்.
தனக்கு நல்ல முறையில் முதுகெலும்பு இருப்பதை பல தடவைகள் நிரூபித்துள்ளேன். கடந்த 2015 ஜனவரி 08 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலில் நிரூபித்தேன். பிரதமரை நீக்கிவிட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை நியமித்ததன் மூலமும் எனக்கு முதுகெலும்பு உள்ளது என்பதை நிரூபித்துள்ளேன் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற இராணுவத்தினருக்கான நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இதனைக் கூறினார்.
தனக்கு முன்னர் உள்ள ஜனாதிபதிகளுக்கு இவ்வாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தால், அவ்வாறு செய்தவர்களுடைய சொத்துக்கள் கூட இழக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்துள்ள ஜனாதிபதி, கடந்த கால ஜனாதிபதிகளுக்கு முன்வைக்கப்பட்டிருந்த எந்தவொரு பாரிய குற்றச்சாட்டுக்களும் தன்மீது இல்லையெனவும் அறிவித்தார்.
கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்று 3 மாத நிறைவையொட்டி நேற்று நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் காதினல் மெல்கம் ரஞ்ஜித், நாட்டின் அரசியல் தலைவர்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment