மரண தண்டனையை நடைறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி மேற்கொண்ட தீர்மானத்திற்கு தடைவிதித்து, இடைக்கால தடை உத்தரவைப் பிறப்பிக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் யசந்த கோதாகொட உள்ளிட்ட ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் இன்று (வியாழக்கிழமை) குறித்த மனு மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
குறித்த நீதியரசர்கள் கொண்ட குழாம் முன்னிலையில், அந்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது, மனுதாரர் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி நிரான் என்கிடெல், குறித்த மனுவை விசாரணைக்கு உட்படுத்த மேன்முறையீட்டு நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என தெரிவித்துள்ளார்.
அத்துடன், குறித்த மனு மீதான விசாரணை நிறைவடையும்வரை, போதைப்பொருள் வர்த்தகர்களுக்கு எதிராக மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்கு சட்டரீதியான தகைமை இல்லை என்றும் சட்டத்தரணி நீதிமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையடுத்து மனு மீதான விசாரணைகள் இன்றைய தினத்திற்கு பிற்போடப்பட்டன. அதற்கமையவே இன்று குறித்த மனு மீதான விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு மாத்திரம் மரண தண்டனை விதிப்பது தார்மீகமானதல்ல எனக் குறிப்பிட்டு, ஊடகவியலாளர் மாலிந்த செனவிரட்னவினால் கடந்த 28ஆம் திகதி குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment