மாகாண சபைத் தேர்தலை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நடாத்துவதா? இல்லையா? என்பது குறித்த தீர்மானத்தை உயர் நீதிமன்றமே முடிவு செய்ய வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
மாகாண சபைத் தேர்தலை பழைய முறைமைப்படி நடாத்துவதற்கு வாய்ப்புக்கள் இருப்பதா? என உயர் நீதிமன்றத்தின் கருத்தை வினவுமாறு சட்ட மா அதிபரிடம் ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளதாக தன்னிடம் கூறியதாகவும் ஆணைக்குழு தலைவர் குறிப்பிட்டார். இருப்பினும், உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னரேயே அடுத்த கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு தான் கடும் பிரயத்தனம் எடுத்ததாகவும், இது தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் உட்பட பாராளுமன்றத்திலுள்ள சகல உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு தீர்வைப் பெற்றுக் கொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது இழுத்தடிப்புச் செய்யப்பட்டது.
ஜனாதிபதித் தேர்தல் நடாத்தப்படுவதற்கு இடையில் தற்பொழுது எஞ்சியுள்ள காலப்பகுதியில் அதற்கான சட்டங்கள் கொண்டுவரப்பட்டு தேர்தலை நடாத்துவதற்கு போதிய கால அவகாசம் காணப்படாதுள்ளதாகவும் ஆணைக்குழு தலைவர் சுட்டிக்காட்டினார்.
ஜனாதிபதித் தேர்தல் உரிய காலத்தில் கட்டாயம் நடைபெறும் எனவும், அதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதிக்கும் ஒக்டோபர் 10 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட ஒரு தினத்தில் வெளியிடப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment