மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் இந்த வாரம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்திக்க வாய்ப்புள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு நேற்று வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
தற்போதைக்குத் தேர்தலில் இலத்திரனியல் வாக்களிப்பு முறையை அறிமுகப்படுத்துவதோ அல்லது வேறு மாற்றங்களைச் செய்வதோ சாத்தியமற்றது. இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், சபாநாயகர் மற்றும் சிவில் அமைப்புகளை நாடியுள்ளோம்.
இந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்டால், மாகாண சபை தேர்தலை நடத்தத் தயாராக இருப்பதாகக் மஹிந்த தேசப்பிரிய கூறினார். இது சாத்தியமாகும் பட்சத்தில் மாகாண சபைத் தேர்தலை ஒக்டோபர் 8 ஆம் திகதியளவில் நடத்த முடியுமென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் எல்லைநிர்ணய அறிக்கை வர்த்தமானியில் வெளியிடப்படவில்லை என்பதனால் புதிய தேர்தல் சட்டத்தின் கீழ் மாகாண சபை தேர்தல்களை நடத்துவதில் சட்டபூர்வ சிக்கல் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எனவே தேர்தல்களை நடத்த விரும்பினால் நாடாளுமன்றம் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் புதிய சட்டத்தை ரத்து செய்து முந்தைய சட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக உயர் நீதிமன்றத் தீர்ப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோருவதாகக் கூறப்படுகிறமையும் குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment