இலங்கைத்தீவுக்கு சென்றுள்ள ‘அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை’ தொடர்பான ஐ.நாவின் சிறப்பு அதிகாரி கிளெமென்ற் நயாலெட்சோசி வூல் அவர்கள், கன்னியா மற்றும் நீராவியடி பிள்ளையார் கோவில் பகுதிக்கு நேரடியாகச் செல்ல வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அவசர கோரிக்கை ஒன்றினை விடுத்துள்ளது.
இலங்கைத்தீவில் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான உரிமை தொடர்பான மதிப்பீடுகளை செய்வதற்கு, ஒன்பது நாள் பயணமாக ஐ.நா அதிகாரி சென்றுள்ள நிலையில், தமது மரபுரிமையினை காக்கவும், பௌத்த மயமாக்கலுக்கு எதிராகவும் அமைதியான முறையின் ஒன்றுதிரண்ட தமிழ்மக்கள் மீது ஒடுக்குமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் இந்த அவசர கோரிக்கையினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விடுத்துள்ளது.
திருகோணமலை- கன்னியா வெந்நீரூற்றில் அமைந்துள்ள தமிழர்களின் பாராம்பரிய வழிபாட்டுத்தளமான பிள்ளையார் கோவிலை இடித்து விட்டு, அவ்விடத்தில் விகாரை கட்டும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதோடு, முல்லைதீவு செம்மலை நீராவியடி பிள்ளையார் கோவில் வளாகத்தினை ஆக்கிரமித்து பௌத்த சிலையொன்று எழுப்பப்பட்டுள்ளது.
பாரம்பரியமான தமது வழிபாட்டுதளங்கள் ஆக்கிரமிப்புக்கு உள்ளாக்கப்பட்டு பௌத்தமயமாவதற்கு எதிராக தமிழர்கள் தமது மரபுரிமையினைக் கோரும் அமைதிவழிப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
தமிழர்களின் இந்த அமைதிவழிப் போராட்டங்களை சிறிலங்கா அரச கட்டமைப்பினரும், பௌத்த பிக்குகளும் தடுத்து நிறுத்தி அச்சுறுத்தி வரும் நிலையில், குறித்த சம்பவங்கள் மீது கவனம் செலுத்த ஐ.நா அதிகாரியை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.யுலை 18ம் நாள் தொடக்கம் 26ம் நாள் வரை இலங்கைத்தீவில் தங்கியிருக்கும் ஐ.நாவின் அதிகாரி, கொழும்பிலும், வடக்கு, கிழக்கு மற்றும் தென்பகுதிக்கும் அவர் பயணங்களை மேற்கொண்டு, மதிப்பீடுகளை மேற்கொள்ளவுள்ளார்.தொடர்ந்து தனது பயணம் தொடர்பான விரிவான அறிக்கையை அடுத்த ஆண்டு யுன் மாதம் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment