எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் முத்தலாக் தடை மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின்எதிர்ப்புகளுக்கு மத்தியில் முத்தலாக் மசோதா மக்களவையில் நிறைவேறியது. 
இஸ்லாமிய பெண்களை அவர்களுடைய கணவன்மார்கள், 3 முறை தலாக் எனக் கூறி உடனுக்குடன் விவாகரத்து செய்வதை தடை செய்யும் வகையில், முத்தலாக் தடை சட்ட மசோதா, நரேந்திர மோடியின் முந்தைய ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டது. இந்த சட்டத்தின் படி முத்தலாக் முறையில் விவாகரத்து அளித்தால் கணவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை வழங்கப்படும். இந்த மசோதாவின் சில அம்சங்களுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.
இதனை அடுத்து குற்றச்சாட்டுக்கு உள்ளான கணவன்மார்களுக்கு ஜாமீன் கிடையாது என்ற பகுதி நீக்கப்பட்டு மக்களவையில் முந்தைய ஆட்சியின் போது மசோதா நிறைவேறியது. மாநிலங்களவையில், பா.ஜனதா கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், மசோதா நிறைவேறாமல் நிலுவையில் இருந்ததால் முத்தலாக் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே மக்களவையின் பதவிக்காலம் முடிவடைந்ததால், முத்தலாக் தடை மசோதா காலாவதி ஆகிவிட்டது.
தற்போது புதிய அரசு பொறுப்பேற்று, மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், முத்தலாக் மசோதா மீண்டும் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. முத்தலாக் மசோதாவுக்கு காங்கிரஸ், திமுக, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
அதே நேரத்தில் மசோதாவுக்கு அதிமுக ஆதரவு அளித்தது. விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர், ரவீந்திரநாத் குமார், முத்தலாக் தடை மசோதா சமூக ரீதியில் மகளிருக்கு அதிக வலிமையை தரும் என்றார். பழங்காலத்தில் இருந்தே மகளிருக்கு சம உரிமை இல்லாத நிலையில், இந்த மசோதா அதனை பெற்றுத்தர வழி வகுக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.
உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மக்களவையில் முத்தலாக் மசோதா நிறைவேறியது. முத்தலாக் மசோதாவிற்கு ஆதரவாக 303 வாக்குகளும், எதிராக 82 வாக்குகள் பதிவாகின. முத்தலாக் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர். 
அதே போன்று தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது. தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்தில் மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு தேர்தல் ஆணையருக்கு இணையான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி மத்திய தகவல் ஆணையரின் பதவிக் காலம், ஊதியம் உள்ளிட்டவை தொடர்பாக திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்தது இந்த சட்ட திருத்த வரைவு மசோதா கடந்த 19-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதங்களுக்குப் பின்னர் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதாவை நாடாளுமன்ற தேர்வுக்குழுக்கு அனுப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்தன. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் தெரிவிக்காத நிலையில், கடும் அமளிக்கு மத்தியில் தகவல் அறியும் உரிமை சட்ட திருத்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளதால், இந்த மசோதா குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆர்டிஐ சட்டத்தின்படி மத்திய தகவல் ஆணையரின் பதவிக் காலம் 5 ஆண்டுகளாக உள்ளன. மேலும் அவரின் ஊதியம் தேர்தல் ஆணையருக்கு நிகராக உள்ளது. இனிமேல் தகவல் ஆணையரின் ஊதியம், பதவிக் காலம் மற்றும் நியமிப்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்ய இந்தச் சட்டத் திருத்த மசோதா வழிவகுத்துள்ளது.

Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment