அ.தி.மு.க. சட்டமன்ற கட்சித் தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக அ.தி.மு.க. அரசைப்பற்றியும், அதன் நிர்வாகத்தை பற்றியும் குறை கூற புதுவை கவர்னர் கிரண்பேடிக்கு எந்த தகுதியும் கிடையாது.
தண்ணீர் பிரச்சினை என்பது இயற்கை சம்பந்தப்பட்டது. பெருமழை வரும்போது வெள்ளமும், வறட்சி ஏற்படும்போது தண்ணீர் பிரச்சினையும் ஏற்படுவது இயற்கையான ஒன்றாகும்
தற்போது தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குடிதண்ணீருக்கு மாற்று ஏற்பாடாக தமிழக முதல்-அமைச்சரும், துணை முதல்வரும் பல கட்ட நடவடிக்கைகள் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள்.இந்த நிலையில் சின்னஞ்சிறு யூனியன் பிரதேசமான புதுவை மாநில கவர்னர் கிரண்பேடி வழக்கம் போல் தனது மலிவு விளம்பரத்துக்காக இப்பிரச்சினையில் தமிழக அரசை குறை கூறி உள்ளதை புதுவை அ.தி.மு.க. சார்பில் வன்மையாக கண்டிக்கிறோம்.டெல்லியில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மக்களால் துரத்தியடிக்கப்பட்டு தோல்வி கண்டு குறுக்கு வழியில் நியமன பொறுப்பான கவர்னர் பதவியில் உள்ள கிரண்பேடிக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நல்லாட்சி நடத்தும் அ.தி.மு.க. ஆட்சியை பற்றி குறை கூற தகுதி கிடையாது.இவ்வாறு சண்டித்தனமான மோதல் நடவடிக்கையை புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமியுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும்.தனது உயரம் என்ன? தனது தகுதி என்ன? என்பதை உணராமல் ஒரு மாநிலத்தின் துணை நிலை கவர்னர் பிற மாநில ஆட்சியை பற்றி குறை கூறுவது அரசியல் அமைப்பு சட்டப்படி குற்ற செயலாகும்.தமிழக அ.தி.மு.க. அரசைப்பற்றி குறை கூறி குற்றம் சுமத்திய தனது பேச்சை உடனடியாக திரும்ப பெற வேண்டும்.இல்லையெனில் கிரண்பேடியை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் தலைமை அனுமதி பெற்று மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும்.கவர்னரின் வரம்பு மீறிய இச்செயலுக்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி ஜனாதிபதி, பிரதமருக்கு கடிதம் அனுப்பப்படும்.தமிழகத்தில் மிக முக்கியமான ஜல்லிக்கட்டு பிரச்சினை, தமிழக அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டத்தை குறை கூறினார். தற்போது குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட பல விஷயங்களில் விமர்சித்து இருப்பது அவர் வகிக்கும் பதவிக்கு கேடு விளைவிக்கும் செயலாகும்.முதலில் புதுவை மாநிலத்தின் குடிநீர் பிரச்சினை உள்ளிட்ட அனைத்து நிர்வாகத்தையும் பார்ப்பதை விட்டுவிட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, மக்கள் நலனுக்காக தொடர்ந்து நல்லாட்சி நடத்தும் அ.தி.மு.க. அரசைப்பற்றி பேசுவது கிரண்பேடிக்கு உகந்தது அல்ல.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment