வங்கதேசத்தில் அவாமி லீக் கட்சியின் தலைவரும் தற்போதைய பிரதமருமான ஷேக் ஹசினா, 25 ஆண்டுகளுக்கு முன்பு எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. 1994ல் ரெயில் மூலம் நாடு தழுவிய பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, செப்டம்பர் 23-ம் தேதி பாப்னா ஐஷ்வர்டிக்கு வந்தபோது, அவர் பயணம் செய்த ரெயில் பெட்டி மீது வெடிகுண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் ஹசீனா அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.
இது தொடர்பாக 135 பேர் மீது ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, பாப்னா கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிகையில், 52 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன்பின்னர் வழக்கில் வாதப்பிரதிவாதங்கள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, குற்றம்சாட்டப்பட்டவர்களில் 9 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. 25 பேருக்கு ஆயுள் தண்டனையும், 13 பேருக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனையும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். தண்டனை பெற்றவர்கள் அனைவரும் வங்கதேச தேசியவாத கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பதால், இந்த தீர்ப்புக்கு எதிராக அக்கட்சியினர் நீதிமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதேபோல் தீர்ப்பை வரவேற்று அவாமி லீக் கட்சியினர் முழக்கமிட்டனர். அரசுமுறைப் பயணமாக பீஜிங் சென்றிருந்த பிரதமர் ஹசீனா நாடு திரும்பும் வேளையில் இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment