கேரளாவில் கனமழைக்கு மேலும் 3 பேர் பலியாகி உள்ளனர். இதையடுத்து கடந்த 4 நாளில் பலியானவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது. மாயமான 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். கேரளாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. குறிப்பாக திருச்சூர், வயநாடு, இடுக்கி, கோழிக்கோடு, மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக மிக பலத்த மழை பெய்து வருகிறது.
பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. 2வது நாளாக நேற்றும் கண்ணூர், காசர்கோடு, கோழிக்கோடு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டிருந்தது. கேரளாவில் மழைக்கு பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கோழிக்கோடு அருகே பாலுசேரி பகுதியில் தேங்கி கிடந்த தண்ணீரில் விழுந்து கிருஷ்ணன்குட்டி (65) என்பவர் இறந்தார். இதேபோல் மலப்புரம் அருகே தானாளூர் பகுதியில் முஸ்தபா மகன் லதீப் (20) ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இறந்தார். கண்ணூர் மாவட்டம் பையனூர் பகுதியில் ரவி மகன் ரிதுல் (22) குளத்தில் மூழ்கி இறந்தார். இவர்களுடன் கடந்த 4 நாட்களில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இதே போல் கடலில் மாயமான குமரி மாவட்டம் நீரோடி பகுதியை சேர்ந்த ஜான் போஸ்கோ என்ற மீனவரை தேடும் பணி நடந்து வருகிறது. கண்ணூர், காசர்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டதால், இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடலில் மீன்பிடிக்க செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதேபோன்று, கண்ணூர், காசர்கோடு மாவட்டங்களில் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனமழையை தொடர்ந்து கேரளா முழுவதும் 26 நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன. இதில் 1,519 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர். கேரளாவில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் இடுக்கி மற்றும் முல்லைபெரியாறு அணைகளின் நீர்மட்டம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது.
0 comments:
Post a Comment