'களமிறங்குவோம் நமக்கு நாமே' என நீர்நிலைகளை துார்வாரி சீரமைக்க பொதுமக்கள் மற்றும் தன்னார்வ அமைப்புகளுக்கு தமிழக அரசு 'சிவப்பு கம்பளம்' விரித்துள்ளது. பத்து நிபந்தனைகளுடன் மாவட்ட கலெக்டர்களும் நீர்நிலைகளை சீரமைக்க அனுமதி அளித்து வருகின்றனர்.
பருவமழை பொய்த்ததாலும் நீர் நிலைகள் அழிப்பு உள்ளிட்ட காரணங்களாலும் சென்னை உட்பட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் தண்ணீர் தட்டுப்பாட்டால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்த நேரத்தில் அரசை நம்பியிருக்காமல் 'களமிறங்குவோம் நமக்கு நாமே' என பொதுநல சங்கங்களும் தன்னார்வலர்களும் நீர்நிலைகளை சீரமைக்க முன் வர வேண்டும் என நம் நாளிதழில் அறிவிப்பு வெளியிட்டதோடு விழிப்புணர்வு செய்திகளும் வெளியிடப்பட்டு வருகின்றன.
இதையடுத்து தமிழகம் முழுவதும் பொதுமக்கள் ஆர்வமுடன் நீர்நிலைகள் சீரமைப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு மாவட்ட நிர்வாகமும் பொதுப்பணித் துறையும் அனுமதி தராமல் இழுத்தடித்து வந்தன. இதையறிந்த முதல்வர் பழனிசாமி ஏரி சீரமைப்பில் ஈடுபடுவோருக்கு அனுமதி அளிக்க உத்தரவிட்டுள்ளார்.இதன்படி மாவட்ட நிர்வாகமும் அனுமதி அளித்து ஊக்கம் அளித்து வருகிறது. இதற்கான அனுமதி பெற 10 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
நிபந்தனைகள் என்ன?
*களை அகற்றி அருகில் உள்ள மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் உள்ளாட்சியின் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் சேர்க்க வேண்டும்
* ஏரி கரையின் மீதுள்ள செடி கொடி முட்புதர்களை மட்டுமே அகற்ற வேண்டும்
* ஏரியின் நீர் பிடிப்பு பகுதியிலிருந்து எடுக்கப்படும் மண்ணை கரையை பலப்படுத்த மட்டுமே பயன்படுத்த வேண்டும்; எக்காரணம் கொண்டும் மண்ணை வெளியில் எடுத்துச் செல்ல கூடாது
* துார்வாரும் பணியின் போது நீரியல் அமைப்புகளான கரை மதகுகள் கலங்கல்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படுத்த கூடாது
* ஏரியின் எதிர் வாயிலை சுற்றி குப்பைகள் கழிவுகள் கொட்டப்படாத வகையில் உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும்
* ஏரிக்குள் துார்வாரும் பணிகள் துவங்கும் முன் நீர்வள ஆதாரத் துறையின் பிரிவு அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்
* ஏரியில் துார்வாரும் பணிகளை அனுமதி வழங்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்
* துார்வாரும் பணிகள் துவங்கும் முன் துவங்கிய பின் முடிந்த பின் ஆகிய மூன்று நிலைகளில் ஒவ்வொரு பகுதியையும் புகைப்படம் எடுக்க வேண்டும். அனுமதி பெற்ற அமைப்பின் பொறுப்பாளர் இந்த புகைப்படங்களை நீர்வள ஆதார துறையிடம் ஒப்படைக்க வேண்டும்
* பணிகள் குறித்த காலத்தில் முடிக்கப்படா விட்டாலோ தொழில்நுட்ப ஆலோசனையின்படி பணிகள் மேற்கொள்ளப்படா விட்டாலோ எவ்வித முன்னறிவிப்பும் இன்றி அனுமதி ரத்து செய்யப்படும்
* ஏரிகளில் சீரமைப்பு பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும்; பணிகள் முடிந்தபின் ஏரிகளின் மீது எவ்வித உரிமையும் கோர முடியாது.
இந்நிபந்தனைகளுக்கு உட்படும் அமைப்புகள் மட்டுமே துார் வாரும் பணிகளில் ஈடுபட முடியும். காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் ஏரிகளை துார்வார தன்னார்வலர்களுக்கு வழங்கப்படும் அனுமதி கடிதங்களில் இந்த நிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளன.
அரசின் நோக்கம் தான் என்ன
மேற்குறிப்பிட்ட நிபந்தனைகள் பயனளிக்கத் தக்கவை தான் என்றாலும் தன்னார்வலர்களை பணி செய்ய விடாமல் துண்டிக்கும் நோக்கில் 'பணிகள் குறித்த காலத்தில் முடிக்கப்படா
விட்டாலோ தொழில்நுட்ப ஆலோசனைப்படி நடக்காவிட்டாலோ அனுமதி துண்டிக்கப்படும்' என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தமிழகம் பழையபடி தண்ணீர் அற்ற நிலைக்குச் செல்லக் கூடிய நிலையை ஏற்படுத்தி விடும்.
இது குறித்து தன்னார்வலர்கள் சிலரிடம் கேட்டபோது 'நாங்கள் களத்தில் இறங்கியதன் நோக்கமே நீர்நிலைகளைத் துார்வார அரசு ஒரு துளியும் முனைப்பு காட்டவில்லை ஆதாயம் பார்க்க நினைக்கிறது என்பது தான். இப்போது எங்களின் கையைக் கட்டிப் போட அரசு இப்படி ஒரு நிபந்தனையை விதிக்கிறதோ என எண்ணத் தோன்றுகிறது' எனக் கூறுகின்றனர்.
0 comments:
Post a Comment