இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் இன்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தை போன்று எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படாததால் மற்ற மாநிலங்களில் பாரதீய ஜனதா பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. பாரதீய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு மத்திய பிரதேசத்தில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
புதிய கல்வி கொள்கை தொடர்பாக கருத்துக்களை கூற 30-ந் தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அதனை நீட்டிக்க வேண்டும். புதிய கல்வி கொள்கை தொடர்பாக விவாதம் நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தையும் உடனே கூட்ட வேண்டும்.
5 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும். தமிழகத்தை வஞ்சிக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்துவதில் மாநில அரசு எதிர்ப்பு தெரிவிக்காமல் மவுனம் சாதிப்பது வேடிக்கையாக உள்ளது.
சென்னை உள்பட 20 மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்தல் போன்றவை நடைபெற்றும் காவிரியில் இருந்து கர்நாடகம் தண்ணீர் திறக்கவில்லை. 9.19 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்ட பிறகும் தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க கர்நாடக அரசு மறுக்கிறது. அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பிய பிறகு தண்ணீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்படும்போது தான் காவிரியில் தண்ணீரை திறப்பார்கள் போல் உள்ளது. இதன் காரணமாக 7 ஆண்டுகளாக குறுவை சாகுபடி செய்ய முடியாமல் டெல்டா விவசாயிகள் பாதிக்கப்பட்டு உள்ளனர். உடனடியாக காவிரியில் தண்ணீர் விட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சென்னையில் ஒரு டேங்கர் லாரி தண்ணீர் ரூ.1500-க்கு விற்றது தற்போது ரூ.5 ஆயிரத்துக்கு விற்பனை ஆகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் ஒரு குடம் தண்ணீர் ரூ.10 வரை விற்பனை செய்யப்படுகிறது. குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அ.தி.மு.க.வில் ஏற்பட்டுள்ள இரட்டை தலைமை பிரச்சினையால் தமிழகம் ஸ்தம்பித்துள்ளது. எனவே இதற்கு தீர்வு காண வேண்டும். அ.தி.மு.க.வை தற்போது அமித்ஷா தான் இயக்கி வருகிறார். மாநில அரசுக்கு வளர்ச்சித்திட்டங்களில் அக்கறை இல்லை. ஆட்சியை தக்க வைக்க வேண்டும் என்பதற்காக பாரதீய ஜனதாவுடன் உள்ளனர். இதன் மூலம் தமிழக மக்களுக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. பாரதீய ஜனதா அ.தி.மு.க.வுக்கு எதிராக பாராளுமன்ற, சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் தீர்ப்பு அளித்துள்ளனர்.
13 எம்.எல்.ஏ. தொகுதிகளை அ.தி.மு.க.விடம் இருந்து எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் வழங்கி உள்ளனர். மக்கள் இந்த ஆட்சியை ஏற்கவில்லை என்பது இதன் மூலம் தெரிகிறது.
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம் அமைக்க கூடாது. மாநில அரசு அதனை தடுத்து நிறுத்த வேண்டும். உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுமா? என்பது சந்தேகம் தான். மக்களை சந்திக்க அ.தி.மு.க. அஞ்சுகிறது. கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றுபட வேண்டும் என்பது எங்கள் கருத்து. 1964-ல் கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றாகத் தான் இருந்தது.
நாகர்கோவிலில் பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மலையடிவாரங்களில் கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 comments:
Post a Comment