தென் இந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ந்தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கி 10-ந்தேதி (திங்கட்கிழமை) வரை நடைபெறுகிறது. 11-ந்தேதி வேட்புமனு பரிசீலனை நடைபெறுகிறது.
வேட்புமனுக்களை திரும்ப பெற 14-ந்தேதி கடைசி நாள் ஆகும். அன்று மாலையே இறுதி பட்டியல் வெளியிடப்படும். வெளியூரில் இருக்கும் சங்க உறுப்பினர்கள் வாக்களிக்க வசதியாக தபால் வாக்குச்சீட்டுகள் 16-ந்தேதி முதல் வினியோகிக்கப்படும். தபாலில் ஓட்டுகள் பதிவு செய்ய 22-ந்தேதி கடைசி நாளாகும்.
நடிகர் சங்க தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான ‘பாண்டவர் அணி’யின் தற்போதைய நிர்வாகத்தினர் மீண்டும் போட்டியிடுவதாக அறிவித்தனர். தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
ஒரு துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் போட்டியிடுகிறார். இன்னொரு துணைத்தலைவர் பதவிக்கு கடந்த முறை பொன்வண்ணன் போட்டியிட்டார். இந்த முறை அவருக்கு பதில் பூச்சி முருகன் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு மீண்டும் கார்த்தி போட்டியிடுகிறார். செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு கோவை சரளா, மனோபாலா, குஷ்பு உள்ளிட்ட 26 பேர் போட்டியிடுகின்றனர்.
நாசர் அணிக்கு எதிராக போட்டி அணியை உருவாக்கும் முயற்சிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வந்தன. ஐசரி கணேஷ் பொதுசெயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்தும் உதயா துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுவதும் நேற்று வரை உறுதியாகி இருந்தது.
இந்தநிலையில் நேற்று மாலை இயக்குனரும் நடிகருமான கே.பாக்யராஜ் இந்த அணி சார்பில் தலைவர் பதவிக்கு நாசரை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்தார். உதயாவுடன் குட்டி பத்மினியும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
0 comments:
Post a Comment