சாய்ந்தமருதில் தற்கொலைக் குண்டை வெடிக்கச் செய்து உயிரிழந்த தற்கொலைதாரிகளினதும், அவர்களின் குடும்பத்தினரதும் சடலங்கள் இன்றையதினம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளன.
அம்பாறை பிரதான நீதவான் அசங்கா ஹெட்டிவத்த முன்னிலையில் சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டன.
இவ்வாறு எடுக்கப்பட்ட தற்கொலைதாரிகளின் உடற் பாகங்கள் மரபணு பரிசோதனைகளுக்காக இரசாயன பகுப்பாய்வு அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அவற்றில் நான்கு உடற் பாகங்கள் அழுகிய நிலையில் காணப்பட்டதால் சடலத்தின் உடற்பாகங்கள் சில மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு பகுப்பாய்வாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
அம்பாறை முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ருச்சிர நதீரவின் முன்னிலையில் இந்த உடற்பாகங்கள் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதி கல்முனை – சாய்ந்தமருது 'சுனாமி கிராமத்தில்' உள்ள வீடொன்றில் வைத்து, பாதுகாப்புத் தரப்பினருடன் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர், வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்ததில் 15 பேர் உயிரிழந்தனர்.
குறித்த வீட்டிலிருந்து 6 சிறுவர்களினதும், 6 ஆண்களினதும், 3 பெண்களினதும் சடலங்கள் மீட்கப்பட்டன.
தற்கொலைத் தாக்குதலை மேற்கொண்ட சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸீமின் தந்தை, அவரின் சகோதரர்கள் இருவர் மற்றும் ஒரு சகோதரரின் மனைவி ஆகியோரும் சடலங்களாக மீட்கப்பட்டவர்களில் அடங்குகின்றனர்.
குறித்த குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த பெரியோர்களின் சடலங்கள், கடந்த மாதம் 2ஆம் திகதி அம்பாறை பொது மயானத்தில், இஸ்லாமிய மத செயற்பாடுகளின்றி, பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அடக்கம் செய்யய்பட்டது.
0 comments:
Post a Comment