பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அபார வெற்றி பெற்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த 30-ந் தேதி பதவி ஏற்றது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் 31-ந் தேதி கூடிய மத்திய மந்திரிசபையின் முதல் கூட்டத்தில் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை ஜூன் 17-ந் தேதி கூட்ட முடிவு எடுக்கப்பட்டது.
அதன்படி இன்று 17-வது பாராளுமன்ற மக்களவை முதல் முறையாக கூடுகிறது. முதல் நாளான இன்று புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதிய உறுப்பினர்களுக்கு இடைக்கால சபாநாயகர் வீரேந்திர குமார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிய உறுப்பினர்கள் பதவி ஏற்பு நிகழ்ச்சி நாளையும் தொடர்ந்து நடைபெறும்.நாளை மறுநாள் (19-ந் தேதி) புதிய சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது. 20-ந் தேதி பாராளுமன்ற கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உரை ஆற்றுகிறார். அவர் புதிய அரசின் திட்டங்களை பட்டியலிட்டு பேசுவார்.
அதைத் தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதங்கள் நடக்கும். விவாதத்துக்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி பேசுவார்.
அடுத்த மாதம் 4-ந் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும். அதைத் தொடர்ந்து 5-ந் தேதி காலை 11 மணிக்கு பாராளுமன்ற மக்களவையில் தனது முதல் பட்ஜெட்டை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட் 2019-20 நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டாக அமையும்.
0 comments:
Post a Comment