ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முல்லைத்தீவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டத்தின் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவே அவர் இன்று (சனிக்கிழமை) இந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளார். இதனை முன்னிட்டு முல்லைத்தீவு நகரம் எங்கும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
ஜனாதிபதியின் எண்ணக்கருவில் உருவான ‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’ தேசிய வேலைத்திட்டத்தின் 4ஆம் கட்ட நிகழ்வுகள் முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஒருவாரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன் இறுதி நாள் நிகழ்வில் கலந்துகொள்வதற்காகவும் பல்வேறு வேலைத்திட்டங்களை ஆரம்பித்து வைப்பதற்காகவுமே ஜனாதிபதி இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இதற்காக ஜனாதிபதி செயலகமும் முல்லைத்தீவு மாவட்ட செயலகமும் இணைந்து பல்வேறு ஆயத்த வேலைகளை மேற்கொண்டுள்ளன.
முல்லைத்தீவுக்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரி, முதல் நிகழ்வாக வெலிஓயாப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிரிஇப்பன் வெவ என்ற குளத்தைத் திறந்து வைத்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைக்கவுள்ளார். அதனைத்தொடர்ந்து முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் ஸ்ரீலங்கா நிலையத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் தேசிய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார். அதன் பின்னர் மல்லாவி வைத்தியசாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறுநீரகப் பிரிவை இலத்திரனியல் முறை மூலம் திறந்து வைக்கவுள்ளார். அதனைத் தொடர்ந்து பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை ஆரம்பித்து வைப்பதோடு சமுர்த்திப் பயனாளிகளுக்கான வாழ்வாதாரத் திட்டங்களையும் ஜனாதிபதி வழங்கி வைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment