பாஜகவினர் - போலீசார் இடையே மோதல்

மேற்கு வங்காளம் மாநிலத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அம்மாநிலத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது.
 
அம்மாநிலத்தில் தேர்தலுக்கு பின்னர் வெற்றி ஊர்வலங்கள் நடத்த கூடாது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

 
இந்நிலையில், தினஜ்பூர் மாவட்டத்துக்குட்பட்ட கங்காராம்பூர் பகுதியில் இன்று வெற்றி ஊர்வலம் நடத்திய பாஜகவினருக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது.
 
மேற்கு வங்காளம் மாநிலத்தின் பாஜக தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலிப் கோஷ் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்துக்கு போலீசார் தடை விதித்திருந்தும் தடையை மீறி இந்த ஊர்வலம் நடத்தப்பட்டதால் அதை தடுத்தி நிறுத்திய போலீசார் மீது பாஜகவினர் சிலர் தாக்குதல் நடத்தியதாகவும் அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பாஜக தலைவர் திலிப் கோஷ், 'மேற்கு வங்காளத்தில் எங்களது வாக்கு வங்கி 40.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. பாராளுமன்ற தேர்தலில் எங்கள் வேட்பாளர்கள் 18 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.
 
எனவே, எங்களை கண்டு மாநில அரசு அஞ்சுகிறது. வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக நாங்கள் நடத்தும் ஊர்வலங்களை தடுக்க போலீசாரை பயன்படுத்துகிறது. போலீசார் அனுமதி அளிக்க மறுத்தாலும் நாங்கள் ஊர்வலங்களை தொடர்ந்து நடத்துவோம்’ என்று குறிப்பிட்டார்.
 
இந்த மோதல் தொடர்பான செய்திகள் வெளியானதும் நிருபர்களுக்கு பேட்டியளித்த திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளரும் அம்மாநில மந்திரியுமான பார்த்தா சாட்டர்ஜி, மேற்கு வங்காளத்தில் நிலவிவரும் அமைதியான சூழலை சீர்குலைக்க பாஜக முயன்று வருகின்றது என்று குற்றம்சாட்டியுள்ளார்.
 
நாங்களும் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறோம். ஆனால், வெற்றி ஊர்வலங்களை நடத்துவதில்லை. இம்மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவதை திரிணாமுல் காங்கிரஸ் விரும்பவில்லை என அவர் தெரிவித்தார்.
Share on Google Plus

About yathi

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment