ஜப்பானில் நடைபெறவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பிரதமர் மோடி சந்தித்து பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபடப்போவதாக இந்திய ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது இந்தியாவை அமெரிக்கா வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலிருந்து விலக்கிய விவகாரம், இரு தரப்பு வரி விதிப்பு பிரச்சினை, விசா விவகாரம், இரு தரப்பு இராணுவ அரசியல் உறவுகளை வலுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
14ஆவது ‘ஜி-20’ உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்தில் எதிர்வரும் 28ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
குறித்த மாநாட்டில் ஆர்ஜெண்டினா,அவுஸ்ரேலியா, பிரேசில், கனடா, சீனா, ஐரோப்பிய யூனியன், பிரான்ஸ், ஜேர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், மெக்சிகோ, ரஷியா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, தென் கொரியா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 20 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் 25ஆம் திகதி அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பியோ இந்தியாவுக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment