பயங்கரவாதத்துக்கு துணைபோன விவகாரம் குறித்து அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக தம்மிடம் பல்வேறு ஆதாரங்கள் காணப்படுவதாகவும் அவற்றை எதிர்வரும் 11ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கவுள்ளதாகவும் தேசிய சுதந்திர முன்னணி தெரிவித்துள்ளது.
மேலும், இதனால் ரிஷாட் தொடர்பான பல்வேறு விடயங்கள் வெளியுலகுக்கு தெரியவரும் என்றும் அந்தக் கட்சி குறிப்பிட்டுள்ளது
கொழும்பில், இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டிருந்தபோதே அந்தக் கட்சியின் ஊடகப்பேச்சாளர் மொஹமட் முஸாமில் இவ்வாறு கூறினார்.
இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர், “இந்த அமைச்சர்கள், தமது தனிப்பட்ட தேவைகளுக்காகவே இன்று தங்களது பதவிகளில் இருந்து இராஜினாமா செய்துகொண்டுள்ளனர். இதனை தற்போது அனைத்து சமூகத்திற்காகவும் மேற்கொண்டதாக அவர்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.
அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு எதிராகவும் குற்றங்கள் முன்வைக்கப்படவில்லை. மாறாக ரிஷாட் பதியுதீன், ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி, முஜிபூர் ரஹ்மான் போன்றோர் மீதே குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளன.
ஈஸ்டர் தாக்குதல் குறித்து ரிஷாட் பதியுதீன் மீது படிந்த இரத்தக்கறையை, ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் பூசும் வகையில்தான் முஸ்லிம் பிரதிநிதிகள் இராஜினாமா செய்துள்ளனர்.
இதனை சிந்தித்துப் பார்க்க வேண்டும். ரவூப் ஹக்கீமுக்கு இராஜினாமா செய்ய வேண்டிய தேவை ஏன் உள்ளது?
அதாவது, அரசியலில் அவர் அடுத்த கட்டத்துக்குச் செல்ல வேண்டுமெனில், இனவாத சக்தியொன்று அவசியமாகும். இதற்காகவே, அவர் இராஜினாமா செய்துகொண்டுள்ளார்.
இது ஒரு அரசியல் விளையாட்டாகவே கருதப்படுகிறது. முஸ்லிம் சமூகத்திற்கு இதனால் ஏற்பட்டுள்ள அவப்பெயருக்கு இராஜினாமா செய்த அனைத்து முஸ்லிம் பிரதிநிதிகளும் பதில் கூறவேண்டும்.
ரிஷாட் பதியுதீன் நல்லவர் போல கருத்து வெளியிடுகிறார். இவருக்கு எதிரான பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான தகவல்கள் எமக்கு தற்போது கிடைத்துள்ளன.
அந்தவகையில், எதிர்வரும் 11ஆம் திகதி எமக்குக் கிடைத்த இந்தத் தகவல்களை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்க நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அப்போது அனைத்து விடயங்களும் வெளிவரும்.
பயங்கரவாதத்தைப் பாதுகாக்க அவர் எவ்வாறு செயற்பட்டார் என்பதெல்லாம் மக்கள் அதன்பின்னர் அறிந்துகொள்வார்கள்” என அவர் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment