மடு திருத்தளத்திற்கு வரும் அனைத்து மக்களும், பாதுகாப்பின் அவசியமான சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுவார்கள் என்று மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா தொடர்பான கலந்துரையாடல் நேற்று மன்னார் மாவட்டச் செயலகத்தில் இடம் பெற்றது. இதன்போதே ஆயர் இதனைத் தெரிவித்தார். அவர் தெரிவித்ததாவது,
மடு அன்னையின் ஆடி மாத திருவிழா எதிர் வரும் 2 ஆம் திகதி நடாத்துவதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
மருதமடு அன்னையின் பரிந்துரையை மக்கள் பெற்றுக்கொண்டு ஆசிர்வாத்தின் வழியாக அவர்களின் வாழ்க்கை சிறப்புப் பெற வேண்டும்.
பாதுகாப்பிற்காக மேற்கொள்ளப்படும் அனைத்து விதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதோடு, பாதுகாப்பு சோதனைகளுக்கு முகம் கொடுக்கும் வகையில் மக்களும்,பக்தர்களும் தயாராக வர வேண்டும்.
உங்களையும், உங்கள் உடமைகளையும் சோதனை செய்து தான் ஆலயத்தின் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவீர்கள். அதனை மனதில் வைத்து ஆடி மாத திருவிழாவுக்கு வர முடியும். நாங்கள் உங்களை வரவேற்கின்றோம்-என்றார்.
மன்னார் மாவட்டச் செயலர் சி.ஏ.மோகன்றாஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்ணான்டோ ஆண்டகை, மன்னார் மறைமாவட்டக் குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார், மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார் உட்பட அழைக்கப்பட்ட திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குறிப்பாக இராணுவம்,பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்களாக 15 திணைக்களங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment