அவுஸ்ரேலியாவில் எல்லைப் பாதுகாப்பு கொள்கையில் எந்த மாற்றமும் கிடையாது என லிபரல் அரசாங்கம் அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில், ஆளுங்கட்சியான லிபரல் கூட்டணி அரசு ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ள சூநிலையில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு பின்பு எல்லைக் கொள்கையில் மாற்றம் ஏற்படும் என்ற எண்ணத்தில் சட்டவிரோதமான படகு பயணத்தை தொடர்ந்து ஊக்குவிக்க ஆட்கடத்தல்காரர்கள் முயன்றதாக கூறப்பட்டது.
அதை நிரூபிக்கும் விதமாக அவுஸ்ரேலிய தேர்தலுக்கு முன்னதாக இலங்கையிலிருந்து புறப்பட்ட படகு மே மாத இறுதியில், எல்லைப்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில், படகு வழியாக வர முயற்சிப்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கட்டளை அதிகாரி க்ரைக் புரினி, அண்மையில் முடிந்த அஸ்திரேலிய தேர்தலைத் தொடர்ந்து சட்டவிரோதமாகப் பயணிக்க முயற்சிக்கும் ஆட்கடத்தும் படகுகள் அனைத்தையும் நிறுத்தும்படி பிரதமர் தனக்கு அறிவுறுத்தியதாக குறிப்பிட்டிருக்கிறார்.
“சட்டவிரோத படகுப் பயணத்திற்கு முயற்சிப்பீர்களேயானால், நீங்கள் தடுத்து நிறுத்தப்படுவீர்கள். எப்போதும் போல எமது எல்லைகள் உறுதியானவை. நீங்கள் வெற்றிக்கரமாக உள்ளே நுழைவதற்கான வாய்ப்பு அறவும் கிடையாது,” என கட்டளை அதிகாரி புரினி எச்சரிக்கை காணொலி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
கடந்த காலங்களில், அவுஸ்ரேலியாவுக்கு செல்ல முயன்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த தஞ்சக்கோரிக்கையாளர்கள் சுமார் 5 ஆண்டுகளுக்கு மேலாக மனுஸ் மற்றும் நவுருத்தீவில் உள்ள அவுஸ்ரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த வாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அவுஸ்ரேலிய உள்துறை அமைச்சர் பீட்டர் டட்டன், “ஆட்கடத்தல்காரருக்கு நீங்கள் பணம் கொடுத்தால், நீங்கள் பணத்தை இழப்பீர்கள். உடனடியாக நீங்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படுவீர்கள்” என எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment