மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் தற்கொலை தாக்குதல் நடத்திய மனித வெடிகுண்டின் உடலை காத்தான்குடியில் அடக்கம் செய்யக்கூடாது என காத்தான்குடி நகரசபை நேற்று தீர்மானம் நிறைவேற்றியது.
உயிர்த்த ஞாயிறு தினத்தில் மட்டக்களப்பு சீயோன் தேவாலயத்தில் நடத்தப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டனர்.
காத்தான்குடியை சேர்ந்த முகமது நாசார் முகமது ஆசாத் என்ற மனித வெடிகுண்டு இந்த தாக்குதலை நடத்தினார்.
அவரது தலை மற்றும் சிதைந்த உடல்பாகங்களை, தாயார் அடையாளம் காட்டினார். டி.என்.ஏ பரிசோதனையிலும் மீட்கப்பட்ட பாகங்கள் ஆசாத்தினுடையது என்பது தெரிய வந்தது.
இதையடுத்து அந்த பாகங்களை அரச செலவில் அடக்கம் செய்ய மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மட்டகளப்பு விமானநிலையத்திற்கு அண்மையாக உள்ள புதுநகர் பகுதியிலுள்ள ஆலையடி மயானத்தில் மனித வெடிகுண்டின் உடல் பாகங்களை அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்தது. இதையறிந்த பிரதேசவாசிகள், எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து காத்தான்குடியில் அடக்கம் செய்ய ஏற்பாடு நடந்த நிலையிலேயே, காத்தான்குடி நகரசபை நேற்று இந்த தீர்மானத்தை நிறைவேற்றியது.
அத்துடன், காத்தான்குடி நகரசபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள அரபு எழுத்து பெயர் பலகைகளை அகற்றி, புதிய பெயர்ப்பலகைகளை பொருத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு தேவையான நிதியை தருமாறு உள்ளூராட்சி அமைச்சை நகரசபை கோரியுள்ளது.
0 comments:
Post a Comment