சர்ச்சைக்குரிய ஆளுநர்களான அஸாத் சாலி மற்றும் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் தமது ராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ள நிலையில் திருகோணமலை மக்கள் வெடி கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.
அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் ஆளுநர்களான அஸாத் சாலி, ஹிஸ்புல்லாஹ் ஆகியோரை பதவியிலிருந்து நீக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரதன தேரர் சாகும் வரையிலான உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இவருக்கு வலுசேர்க்கும் வகையில் நாட்டின் பல பகுதிகளிலும் உண்ணாவிரதப் போராட்டங்களும், கடையடைப்பு போராட்டங்களும், பேரணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் சிலர் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் ஆகியோர் இராஜினாமா கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளனர்.
அவர்கள் இன்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு சென்று தமது இராஜினாமா கடிதத்தை ஒப்படைத்துள்ள நிலையில், கடிதங்களை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருகோணமலை மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உண்ணாவிரதத்தில் ஈடுபடுபவர்கள் இந்த தகவலை அறிந்துள்ள நிலையில் வெடி கொளுத்தி மகிழ்ச்சி ஆரவாரம் செய்துள்ளனர்.
0 comments:
Post a Comment