உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் முன்னிலையாகுமாறு பயங்கரவாத விசாரணைப் பிரிவின் முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டீ சில்வாவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹரானை கைது செய்வதற்கு 2018ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் திகதி பிறப்பித்த பிடியாணை மற்றும் அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பயங்கரவாத விசாரணை பிரிவின் பணிப்பாளராக அப்போது கடமையாற்றியவர் என்ற முறையில் நாலக டீ சில்வாவிடம் இதன்போது விளக்கம் கோரப்படவுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத்தாக்குதல்களில் 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்ததோடு, பலர் கொல்லப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த விடயம் தொடர்பாக ஆராய்வதற்கு பிரதிச் சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.
இந்த தெரிவுக்குழு கடந்த புதன்கிழமை தமது சாட்சி விசாரணைகளை ஆரம்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment