வடக்கில் தோன்றிய ஒரு பிரபாகரனாலேயே நாம் பெரும் பிரச்சனைகளை சந்தித்தோம். இன்னொரு பிரபாகரன் எமக்கு வேண்டாம். எனவே பயங்கரவாதிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டிற்காக ஒன்றிணைவோம் நிகழ்ச்சியின் இறுதிநாள் நிகழ்வு இன்று(சனிக்கிழமை) முல்லைத்தீவில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மொழி, மதம், இனம், சாதி அடிப்படையில் பிரிந்துள்ளோம். நாம் ஒன்றாக இல்லை. நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல பிரதான சவால் அது. இதனால்தான் நாட்டிற்காக ஒன்றிணைவோம் என்ற திட்டத்தை உருவாக்கினோம்.
மகாசங்கத்தினர் ஒன்றாக இருந்து நாடு பிளவடையாமல் செயற்பட வேண்டும். இந்து, கிறிஸ்தவ, இஸ்லாம் மத தலைவர்கள் ஒன்றிணைய வேண்டும். நான் சொல்வதற்கு மன்னிக்க வேண்டும். அவர்களிடமும் ஒற்றுமையில்லை.
இந்த வருட இறுதியில் தேர்தல் வரவுள்ளது. அதை இலக்காக வைத்து பலர் வேலை செய்கிறார்கள். அதனால் நாடு பிரிந்துள்ளது. தவறாக செயற்படுபவர்களை நிராகரிக்க வேண்டும்.
ஏப்ரல் 21 குண்டு வெடிப்பின் பின்னர் 300 இற்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டனர். பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. உல்லாச பயணத்துறை அதளபாதாளத்திற்கு விழுந்துள்ளது.
இனங்களிற்கிடையில் பிளவு அதிகரித்துள்ளது. அதனால் பயங்கரவாதிகளின் நோக்கம் வெற்றியடைந்துள்ளது. அவர்கள் நாட்டை பிரிப்பதற்காகத்தான் குண்டை வெடிக்க வைத்துள்ளனர்.
அரசியல்வாதிகள் நாட்டை இன, மத ரீதியாக பிரிக்கிறார்கள். இன, மத, மொழி, சாதி அடிப்படையில் பிரிவு அதிகரிக்கிறது. இது அழிவானது.
முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை ஒருவாக்க இடமளிக்க வேண்டாம். வடக்கில் ஒரு பிரபாகரன் உருவாகி, பெரும் பிரச்சனை ஏற்பட்டது. தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் பலர் கொல்லப்பட்டனர்.
அந்த அனுபவம் எங்களிடம் உள்ளது. நாட்டில் ஒரு முஸ்லிம் பிரபாகரனை உருவாக்கவே எப்ரல் 21 தாக்குதல் நடந்தது. நாங்கள் அந்த பொறிக்குள் விழக்கூடாது. எனவே நாட்டிலுள்ள அனைவரும் ஒற்றுமையாக வாழ வேண்டும்’ என தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment