சிப்பாயால் அச்சுறுத்தல் ; மனித உரிமைகள் ஆணைக்குழு தீவிர விசாரணை

முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் உடைய போராட்டத்தின்போது வீடியோ எடுத்து அச்சுறுத்திய கடற்படை வீரர் தொடர்பிலான முறைப்பாடு குறித்து,  வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகள் இன்றையதினம் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த சித்திரை மாதம் 7 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தங்கள் பிள்ளைகளை இராணுவத்திடம் கையளித்த இடமான வட்டுவாகல் பாலம் வரை கவனவீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தியிருந்தனர்.

இதன்போது செல்வபுரம் பேருந்து தரிப்பிடத்தில் ஒளிந்து நின்ற சிவில் உடையில் இருந்த ஒருவர்  போராட்டக்காரர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தும் வகையில் புகைப்படம் எடுத்துள்ளார்.

இதனை உறுதிப்படுத்துவதற்காக குறித்த இடத்திற்கு சென்ற காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களோடு ஊடகவியலாளர்களும் சென்றிருந்தனர். 

இந்த நிலையில் பல்வேறு பொய்யான தகவல்களைக் கூறியதோடு அந்த இடத்தில் இருந்து தப்பிச் செல்ல முற்பட்ட  குறித்த நபரை அங்கிருந்தவர்கள் பிடித்து விசாரித்தபோதுதான் கடற்படையைச் சேர்ந்தவர் என அவர் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது. எனினும்  குறித்த இடத்திற்கு பொலிஸார் வர தாமதமானதால் குறித்த நபரை போராட்டம் நிறைவடையும் இடத்தில் இருந்த பொலிஸாரிடம்  கையளித்திருந்தனர். 

இருப்பினும் அங்கிருந்த பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  குறித்த கடற்படை சிப்பாய் மருத்துவமனையில்  ஊடகவியலாளர் ஒருவர் தன்னைத் தாக்கியதாக  முறைப்பாடு பதிவு செய்திருக்கிறார்.

இந்த நிலையில் குறித்த ஊடகவியலாளர்  முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைக்கு அழைத்தனர்.  குறித்த சிப்பாயை தாக்கியதாக தெரிவித்து அந்த ஊடகவியலாளருக்கு  எதிராக முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று இருப்பதோடு அடுத்த வழக்கு தவணையாக ஒன்பதாம் மாதம் பத்தாம் திகதி இடம்பெற இருக்கின்றது .

குறித்த நபரின் அச்சுறுத்தல் செயற்பாடுகள் தொடர்பாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களும் ஊடகவியலாளரும்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பிராந்திய காரியாலயத்தில்   முறைப்பாடு செய்தனர்.

இதற்கமையவே இன்றைய தினம்  விசாரணைகள்  முன்னெடுக்கப்பட்டது.

முல்லைத்தீவு பொலிஸ் நிலைய அதிகாரிகள், முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாம் அதிகாரிகள், கடற்படை அதிகாரிகள் சார்பாக சட்டத்தரணி ஒருவர் மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் முல்லைத்தீவு மாவட்ட இணைப்பாளர், மரியசுரேஷ் ஈஸ்வரி மற்றும்  குறித்த ஊடகவியலாளர்  ஆகியோர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரி சட்டத்தரணி லீனஸ் வசந்தராஜா அவர்களுடைய தலைமையிலே இந்த விசாரணைகள் இடம் பெற்றது இந்த 

விசாரணைகளின் போது கடற்படையினர் குறித்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு தங்களால் எதுவித அச்சுறுத்தலும் இனிவரும் காலங்களில் வழங்கப்படாது என தெரிவித்த உறுதிமொழியை அடுத்து அவர்களுடைய அந்த பிரச்சனை சுமூகமாக இரண்டு தரப்பினராலும் தீர்க்கப்பட்டது.

எனினும் குறித்த ஊடகவியலாளரின்  முறைப்பாட்டில் பொலிஸார் திட்டமிட்டு அநீதி இழைத்து இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அது தொடர்பான அனைத்து சாட்சியங்களையும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்குமாறும் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுப்பதாகவும் வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்தது.





Share on Google Plus

About Thusha

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment