தமிழில் காஞ்சனா படத்தின் 3 பாகங்களை இயக்கி பெரும் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ராகவா லாரன்ஸ். காஞ்சனா படத்தின் முதல் பாகத்தை இந்தியில் லட்சுமி பாம் என்ற பெயரில் இயக்க ஆரம்பித்தார். அக்ஷய் குமார், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடைபெற்றது.
பின்னர் திடீரென அந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்றை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தன் அனுமதி பெறாமல் அந்த போஸ்டரை வெளியிட்டதாகவும், சுயமரியாதைதான் முக்கியம் அதனால் இந்தி ரீமேக்கிலிருந்து விலகுகிறேன் என ராகவா லாரன்ஸ் அறிவித்தார்.
அவரது விலகல் முடிவு இந்தியத் திரையுலகில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. பல ரசிகர்கள் மீண்டும் ராகவா லாரன்ஸ்தான் அந்தப் படத்தை இயக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்கள். அவர்களது வேண்டுகோளை ஏற்ற ராகவா லாரன்ஸ், தயாரிப்பு நிறுவனம் மீண்டும் பேச வருவதாகவும், தன் வேலைக்கு உரிய சுயமரியாதை கிடைத்தால் மீண்டும் படத்தை இயக்குவது பற்றி யோசிப்பேன் என்றும் ரசிகர்களுக்குத் தெரிவித்தார்.
மும்பையிலிருந்து சென்னை வந்து ராகவா லாரன்ஸை சந்தித்த தயாரிப்பு நிறுவனத்தினர் அவருடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதில் சுமுகமான முடிவு எட்டப்பட்டது.
தன்னைத் தேடி வந்து பேசியதாலும், அக்ஷய் குமார் ரசிகர்கள், என் ரசிகர்கள் என பலரும் கேட்டுக் கொண்டதாலும் மீண்டும் காஞ்சனா இந்தி ரீமேக்கான லட்சுமி பாம் படத்தை இயக்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார்.
0 comments:
Post a Comment